

431 நாள்களில் செவ்வாய்கிரகத்துக்குச் சென்று வரலாம் என சென்னை பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனுப்பிய ஆய்வறிக்கையை சிறந்த 10 ஆய்வறிக்கைகளில் ஒன்றாக நாசா தேர்வு செய்துள்ளது. அறிக்கை தயாரித்த மாணவர் குழுவில் சிவகாசி மாணவரும் இடம் பெற்றுள்ளார்.
2018-ம் ஆண்டில் இரு விண்வெளிப் பயணிகளுடன் செவ்வாய்கிரகத்துக்கு ஒரு விண்கலத்தை அனுப்புவதற்கான திட்டப் பணிகளை அமெரிக்க விண் வெளி ஆய்வு மையம் (நாசா) மேற் கொண்டுள்ளது. அதற்கான திட்ட வடிவமைப்பில் ஆலோசனைகள் கூற உலக அளவில் கல்லூரி மாணவர் களிடையே போட்டியை நடத்தியது. அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 50 பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பினர். இதில் சிறந்த 10 ஆய்வுக் கட்டுரைகளை நாசா தேர்வு செய்துள்ளது.
அதில், சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனுப்பிய ஆய்வுக் கட்டுரையும் ஒன்று. இந்தியாவி லிருந்து ஒரே ஒரு ஆய்வுக் கட்டுரை மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வுக் கட்டுரை தயாரிப்புக் குழுவில் இடம் பெற்றுள்ள மாணவர்களில் சிவகாசி யைச் சேர்ந்த ஏ.விஷ்ணுராம்பரத்தும் ஒருவர். விருதுநகர் ரோட்டரி சங்கம் சார்பில் விஷ்ணுராம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடத்தப்பட்டது.
சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மாணவர் விஷ்ணுராம்பரத் 3-ம் ஆண்டு இயந்திர வியல் படித்து வருகிறார். இவரது தந்தை ராம்அசோக் சிவகாசியில் தீப்பெட்டித் தொழிற்சாலை நடத்தி வருகிறார். மாணவர் விஷ்ணுராமுடன் ஆர்.தாகூர், வி.சத்தியா சுப்பிரமணியன், சுந்தர்ராஜன் ஆனந்த், விஜு எல்.ஷா, வி.விஷால், எஸ்.பி. விஷ்ணுகேதார், எஸ்.விஸ்வநாதன் ஆகிய 8 பேரும் இணைந்து கூட்டாக இந்த ஆய்வுக் கட்டுரைகளை தயாரித்து அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து விஷ்ணுராம்பரத் கூறுகையில், செவ்வாய்கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவது குறித்து நாசா திட்டம் தயாரித்து வருகிறது. எங்கள் கல்லூரியில் பயிலும் 10 மாண வர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு திட்ட அறிக்கையை தயாரித்து, கடந்த மார்ச் 15-ம் தேதி நாசாவுக்கு அனுப்பி வைத்தோம். உலகளவில் சிறந்த 10 ஆய்வறிக்கைகளில் ஒன்றாக, எங்களது கட்டுரையும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எங்களது ஆய்வுக்கட்டுரை ஒன்று மட்டுமே இந்தியாவிலிருந்து நாசா தேர்வு செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி, இத்திட்ட அறிக்கை குறித்து விளக்கம் அளிக்க நாசா எங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
செவ்வாய்கிரகத்துக்குச் சென்றுவர நாசா தயாரித்த திட்டத்தின்படி 501 நாள்களாகும். ஆனால், நாங்கள் தயாரித்துள்ள திட்டப்படி 431 நாள்களிலேயே சென்றுவர முடியும்.
பயண நாள்கள் குறைவாக இருப்பதால், உணவு உள்ளிட்ட பொருள்களை குறைவாகவும், ஆராய்ச்சிக்கு பயன்படும் கருவிகளை அதிகமாகவும் எடுத்துச் செல்ல முடியும். இதனால், விண்வெளியிலிருந்து தாக்கும் கதிர்வீச்சுக்களின் அளவும் குறையும். இதனால், விண்வெளிக்குப் பயணம் செய்வோரை புற்றுநோய் போன்ற பாதிப்பிலிருந்து காக்க முடியும். மேலும், பயணம் செய்வோருக்கு கதிர்வீச்சுகள் தாக்காத வகையில் கன உலோகங்கள் மற்றும் வேதிப் பொருள் கலவையில் கவச உடை தயாரிப்பதற்கான புதிய வழிமுறைகளையும் நாங்கள் சமர்ப்பித்துள்ளோம் என்றார்.