Published : 21 Jan 2020 02:50 PM
Last Updated : 21 Jan 2020 02:50 PM

ரஜினி விரைவில் மன்னிப்பு கேட்பார்: உதயநிதி ஸ்டாலின் பேட்டி

பெரியார் குறித்து ரஜினி தெரியாமல் பேசிவிட்டார். உண்மை தெரிந்த பின்பு அவர் நிச்சயம் மன்னிப்பு கேட்பார் என திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி, பெரியார் பற்றி குறிப்பிட்டுப் பேசிய நிகழ்வு சர்ச்சையானது. இரு தரப்பிலும் சமூக வலைதளங்களில் காரசாரமாக மோதிக்கொண்டனர்.

அன்றிரவே திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, ''முதல்வர் என்றால் முத்தமிழ் அறிஞர். தலைவர் என்றால் புரட்சித் தலைவர். தைரியலட்சுமி என்றால் அம்மா'' என ஆண்டாண்டுகாலமாக திமுக எதிர்த்த தலைவர்களையும் புகழ்ந்து ரஜினியை இடித்துரைக்கும் வண்ணம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ரஜினியின் கருத்துக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் எதிர்வினையாற்றிய அளவுக்கு திமுக தலைமையோ, அதன் இரண்டாம்கட்டத் தலைவர்களோ எதிர்க்காத நிலையில் உதயநிதி மட்டும் பதிலளித்திருந்தார். பின்னர் முரசொலி தலையங்கம் மூலம் ரஜினிக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ரஜினி, தான் பெரியார் குறித்துப் பேசியது சரிதான். அதற்கு மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று கூறியிருந்தார்.

இது குறித்துப் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ''நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதி அல்ல, அவர் ஒரு நடிகர். அவரிடம் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 95 ஆண்டு காலம் தமிழ் இனத்திற்காகப் போராடிய பெரியாரைப் பற்றிப் பேசும்போது யோசித்துச் சிந்தித்துப் பேச வேண்டும்'' என்று கூறினார்.

ஸ்டாலின் பதிலளித்த நிலையில் இளைஞரணிச் செயலாளர் உதயநிதியும் பதிலளித்துள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அவசரச் செயற்குழு கூட்டத்திற்குப் பின்பு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பெரியார் பற்றி நான் கூறியதற்கு நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று ரஜினி கூறி உள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த உதயநிதி, ''ரஜினி அரசியலுக்கு வந்த பின்பு நாங்கள் பதில் கூறுவோம். காவிரி விவகாரத்தில் உண்மை தெரிந்த பின்பு அவர் மன்னிப்பு கோரியது போல, பெரியார் விவகாரத்திலும் உண்மை தெரிந்த பின்பு மன்னிப்பு கேட்பார்.

துக்ளக் விழாவில் அவர் தெரியாமல் பேசிவிட்டார். நிச்சயம் உண்மை தெரிந்த பின்பு மன்னிப்பு கேட்பார்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x