தஞ்சைப் பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழா: தமிழ் மொழியில் நடத்துக; வேல்முருகன்

வேல்முருகன்: கோப்புப்படம்
வேல்முருகன்: கோப்புப்படம்
Updated on
1 min read

தஞ்சைப் பெரிய கோயில் திருக்குடமுழுக்கு நிகழ்ச்சியினை கட்டாயம் தமிழில்தான் நடத்த வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, வேல்முருகன் இன்று (ஜன.21) வெளியிட்ட அறிக்கையில், "தஞ்சைப் பெரிய கோயில் என்கின்ற பெரு உடையார் கோயில் உலகம் போற்றும் திருக்கோயிலாகும். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் கோயில் இது. மன்னர் ராஜராஜ சோழன் கட்டிய அற்புதக் கட்டிடக் கலைதான் இந்தக் கோயில். இந்தக் கோயில் ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்பதே ஓர் அதிசயமாகும்.

இந்தக் கோயிலை கட்டிய மன்னர் ராஜராஜ சோழன் பேரரசைப் படைத்தவர் ஆவார். உலகத்தின் முதல் பேரரசர் ராஜராஜ சோழன்தான். பேரரசு என்றால் நாடுகளை வென்ற வேந்தரைக் குறிக்காது; கடல் கடந்த நாடுகளையும் வென்று ஒரு குடையின்கீழ் ஆள்வதே பேரரசின் இலக்கணம் ஆகும். அந்த வகையில் உலகின் முதல் பேரரசர் ராஜராஜ சோழன்தான் ஆவார்.

வரும் பிப்ரவரி 5-ம் தேதி தஞ்சைப் பெரிய கோயிலில் ஆயிரமாவது ஆண்டு திருமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. இந்த விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என்பதே பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் இதற்கு முன் பல்லாண்டு காலமாக தமிழ் முறைப்படி அங்கே திருமுழுக்கு நடைபெறவில்லை, எல்லாமே ஆரிய கலாச்சார அடிப்படையில் வர்ணாசிரம சனாதன வழியில் சமஸ்கிருதத்தை ஓதித்தான் நடைபெற்றிருக்கிறது.

அது மட்டுமல்ல இந்தப் பெரிய கோயிலைக் கட்டிய மன்னர் ராஜராஜ சோழனது நினைவுச் சின்னம் அதாவது சிலை அந்தக் கோயில் வளாகத்திலேயோ, முன்புறத்திலேயோ, அருகிலேயோ கூட இல்லாதிருந்தது. அதனைக் கருணாநிதி தனது ஆட்சியின் போதுதான் நிறுவினார். அதோடு தமிழில் திருக்குடமுழுக்கு நடத்த வழிவகையும் தேடினார். அதற்குள் அவரது ஆட்சி மறைந்துவிட்டது. அதனால் அந்த வேலைகள் தடைபட்டு விட்டன.

இப்போது தஞ்சைப் பெரிய கோயில் மீட்புக்குழு என்ற அமைப்பு கோயிலின் நடைமுறைகள் அனைத்தையும் தமிழில் நடைபெற வேண்டும் என்று போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. விரைவில் இது குறித்து ஒரு பெரிய மாநாட்டையும் நடத்தவிருக்கிருக்கிறது. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தஞ்சைப் பெரிய கோயில் மீட்புக் குழுவுக்கு தனது நல்லாதரவினைத் தெரிவிக்கிறது. அவர்கள் நடத்தும் போராட்டத்திலும் கலந்து கொள்ளவிருக்கிறது.

எனவே, தமிழக அரசு தஞ்சைப் பெரிய கோயில் திருக்குடமுழுக்கு நிகழ்ச்சியினை கட்டாயம் தமிழில்தான் நடத்த வேண்டும்; அப்படித்தான் நடத்தும் என்று நம்புகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இதை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகிறோம்" என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in