Published : 21 Jan 2020 02:44 PM
Last Updated : 21 Jan 2020 02:44 PM

மதுக்கடைகளை மூட ஊராட்சிகளுக்கு அதிகாரம் அளித்து சட்டம் இயற்றுக: அன்புமணி

உள்ளூர் அளவில் மதுக்கடைகளை மூடும் அதிகாரத்தை உள்ளாட்சிகளுக்கு வழங்கி உடனடியாக சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (ஜன.21) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளது. மதுக்கடைகளை மூடும் அதிகாரத்தை கிராம ஊராட்சிகளுக்கு வழங்கி ஏன் சட்டம் இயற்றக்கூடாது? பொது இடங்களில் மது குடிப்பதை ஏன் தடை செய்யக்கூடாது? என்று நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் வரவேற்கத்தக்கவை.

மதுக்கடைகளை மூடும் அதிகாரத்தை கிராம ஊராட்சிகளுக்கு வழங்க தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி, நீதிபதிகள் கார்த்திகேயன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு முழு அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தன. இவ்வழக்கில் பாமகவையும் ஒரு தரப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டில் மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி தொடர்ந்து வலியுறுத்தப்படுவது குறித்த விவரங்களைக் கேட்ட நீதிபதிகள் மேற்கண்ட கேள்விகளை எழுப்பினர்.

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்றும், மதுக்கடைகளை மூடும் அதிகாரத்தை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வரும் கட்சி என்ற வகையில் உயர் நீதிமன்றத்தின் இந்நடவடிக்கை பாமகவுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, இது பாமகவுக்குக் கிடைத்த பெரு வெற்றியுமாகும்.

தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இந்த இலக்கை எட்டுவதற்காக சட்டப்போராட்டத்தையும், அரசியல் போராட்டங்களையும் நடத்தி அதில் குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் குவித்தது பாமகதான். முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளில் ஒன்றாகத் தான் மதுக்கடைகளை மூட ஊராட்சிகளுக்கு அதிகாரம் வேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது.

மகாராஷ்டிராவில் '1949-ம் ஆண்டின் பம்பாய் மதுவிலக்கு சட்டத்தின்'படி மதுவிற்பனை கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, ஏதேனும் ஒரு நகரிலோ அல்லது கிராமத்திலோ மதுக்கடைகள் தேவையில்லை என அங்குள்ள பெண்களில் 25% பேர் மனு அளித்தால் அதனடிப்படையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். நகரப்பகுதிகளாக இருந்தால் வட்ட அளவிலும், ஊரகப்பகுதிகளாக இருந்தால் கிராம அளவிலும் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும். அதில் பங்கேற்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மதுக்கடைகளுக்கு எதிராக வாக்களித்தால், உடனடியாக அங்குள்ள மதுக்கடைகள் மூடப்படும். அதுமட்டுமின்றி, அந்தப் பகுதியில் மதுக்கடைகளை மீண்டும் திறக்க முடியாது. அதேபோன்ற சூழலை ஏற்படுத்த உயர் நீதிமன்றத்தின் ஆணை வழிவகுக்கும். இதற்காக சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு பாராட்டுதல்களையும், நன்றிகளையும் பாமக தெரிவித்துக் கொள்கிறது.

மதுவின் தீமைகள் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து வருகின்றன. மதுப்பழக்கத்தால் தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். நோய்களால் பாதிக்கப்பட்டும், விபத்துகளில் சிக்கியும் லட்சக்கணக்கானோர் உயிரிழப்பதால் ஏராளமான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வருகின்றன; கணவனை இழந்த இளம் பெண்கள் உருவாகின்றனர். கல்லூரி மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகிறார்கள் என்ற நிலை மாறி, பள்ளிக்கூட குழந்தைகளும் மதுவுக்கு அடிமையாகின்றனர். மது குடிப்பதால் 200 வகையான நோய்கள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது.

இந்த நிலை மாற்றப்பட வேண்டுமானால் தமிழகத்தில் முழுமையான மது விலக்கு நடைமுறைப்படுத்தப் பட வேண்டும். அதற்கு முன்னோட்டமாக உள்ளூர் அளவில் பெண்கள் விருப்பப்படி மதுக்கடைகளை மூட வசதியாக ஊராட்சிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும். இதுகுறித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மதித்து, உள்ளூர் அளவில் மதுக்கடைகளை மூடும் அதிகாரத்தை உள்ளாட்சிகளுக்கு வழங்கி உடனடியாக சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்" என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x