

ரஜினியிடம் பத்திரிகை ஆதாரம் கேட்கும் நீங்கள், முதலில் முரசொலி இட மூலப்பத்திரத்தைக் காட்டுங்கள் என திகவினரைக் குறிப்பிட்டு எச்.ராஜா காட்டமாகக் கேட்டுள்ளார்.
ரஜினி சமீபத்தில் நடந்த துக்ளக் பத்திரிகையின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய 2 விஷயங்கள் பெரும் விவாதப்பொருளாயின. ஒன்று 1971-ல் பெரியார் நடத்திய ஊர்வலம் குறித்த துக்ளக் செய்தி. மற்றொன்று முரசொலி, துக்ளக் குறித்த ஒப்பீடு.
இவை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திமுக, பாஜக மற்றும் ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ரஜினியைக் கண்டித்து ட்வீட் செய்தார். திமுக தலைவர்கள் யாரும் ரஜினிக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
அதற்கு அடுத்த வாரம் முரசொலி, தலையங்கம் மூலம் ரஜினிக்குக் கண்டனம் தெரிவித்தது. ஆனால், பெரியார் ஊர்வலம் குறித்த ரஜினியின் பேச்சுக்கு பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. போலீஸில் ரஜினியின் பேச்சு குறித்து புகாரும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்துப் பதிலளித்த ரஜினி, தான் கூறியது உண்மைதான். அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். இதனால் மீண்டும் விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தன் பேச்சுக்கு ஆதாரமாக துக்ளக் இதழின் அசலை ரஜினி காட்டாதது ஏன்? துக்ளக் இதழின் அசலை ரஜினி காண்பிப்பது தான் நேர்மையான செயலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
ரஜினி தனது பேட்டியின்போது, அவுட்லுக் பத்திரிகை இந்து குழுமத்திலிருந்து வருவதாக தவறுதலாகச் சொன்னது விவாதத்தைக் கிளப்பியுள்ள சூழ்நிலையில், இதை திசை திருப்பு முயற்சியில் எச்.ராஜா ட்வீட் செய்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
எச்.ராஜாவின் ட்விட்டர் செய்தி:
“ ரஜினிகாந்த் பத்திரிகைச் செய்தியின் நகலைக் காட்டியதற்கு திகவினர் ஒரிஜினலை காட்டச் சொல்கின்றனர். முதலில் நீங்கள் முரசொலி இட மூலப்பத்திரத்தைக் காட்டுங்கள்”.
இவ்வாறு எச்.ராஜா பதிவிட்டுள்ளார்.
எச்.ராஜாவின் பதிவுக்குக் கீழே பதிலளித்த திமுகவினர், அனைத்தும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அங்கு போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.