

புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமென மூன்றாவது முறையாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கனவு திட்டமான இந்த அறிவிப்பை அரசு இம்முறையாவது நிறைவேற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாட்டின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த புதுக்கோட்டையில் அவரது பெயரில் அரசு தலைமை மருத்துவமனையும், ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையும் உள்ளது.
மாவட்டத்தில் புதுக்கோட்டை யில் நகராட்சி மருத்துவமனை மற்றும் அறந்தாங்கி, திருமயம், கீரனூர், இலுப்பூர், அன்னவாசல், ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை, வலையப்பட்டி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில், சுப்பிரமணி யபுரம் ஆகிய வட்டார மருத்துவ மனைகளும், 61 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன.
சுமார் 18 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர் சிகிச்சை பெறுவதற்கு போதியவசதி இல்லாததால் இங்கிருந்து சிறு, சிறு பிரச்சினைகளுக்குக்கூட தஞ்சை, திருச்சி, மதுரை போன்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கும் நிலை தொடர்கிறது.
இத்தகைய மருத்துவமனை களுக்கு செல்வதற்கு குறைந்த பட்சம் இரண்டரை மணி நேரம் ஆகுமென்பதால் பலர் வழியிலேயே இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதைத் தடுக்க புதுக்கோட் டையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் 2011-ல் புதுக் கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படு மென அறிவிக்கப்பட்டது. அறிவிப்புக்குப் பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்துள்ள அதிமுக அரசு, புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரிக்கு இணை யான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமென கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது. அதன்பிறகு அதற் கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஆய்வு செய்யப் பட்டது. ஆனால், அதற்கான முடிவை இதுவரை மத்திய அரசும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் புதுக்கோட் டையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமென முதல்வர் ஜெயலலிதா பேரவையில் நேற்று அறிவித்துள்ளார். இதற்கு மாவட்டமெங்கும் அதிமுகவினர் வெடி வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். இந்த அறிவிப்பையாவது நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.செங்கோடன் கூறியபோது, “அறிவிப்போடு நின்றுவிடாமல் தேவையான நிதியை உடனே ஒதுக்கி விரைவில் அதற்கான பணிகளைத் தொடங்க இம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முனைப்பு காட்ட வேண்டும்” என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறியபோது, “இந்த அறிவிப்பை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சேகரிப்பதற்கு பயன்படுத்தாமல் உடனே அரசாணையை வெளியிட்டு புதுக்கோட்டை நகரிலேயே மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார்.