Published : 21 Jan 2020 08:29 AM
Last Updated : 21 Jan 2020 08:29 AM

முதல்வர் பழனிசாமி தலைமையில் ஓபிஎஸ், அமைச்சர்கள் பங்கேற்பு; பட்ஜெட் அறிவிப்புகள், திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடியில் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுமதி

சென்னை

தூத்துக்குடியில் ரூ.40 ஆயிரம் கோடியில் அல்கெராபி நிறுவன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உட்பட 14-க்கும் மேற்பட்ட தொழில் திட்டங்களுக்கும், தமிழக பட்ஜெட்டில் இடம்பெற உள்ள புதிய திட்டங்களுக்கும் முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து, 2020-21ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் முதல் வாரத்தில் தாக்கல்செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக, தமிழக அரசின் துறைவாரியான புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் பழைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்குதல் குறித்து அமைச்சரவை கூடி முடிவு எடுக்கும்.

அதன்படி, முதல்வர் பழனிசாமி தலைமையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலர் கே.சண்முகம், நிதித் துறை செயலர் ச.கிருஷ்ணன், தொழில்துறை செயலர் முருகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்ற அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. மாலை 4.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் ஒருமணி நேரத்துக்கு மேல் நீடித்தது.தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்களுக்கு இக்கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. அதை கருத்தில் கொண்டு,இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள், சலுகை அறிவிப்புகள் இருக்கலாம் என்று தெரிகிறது. இத்திட்டங்கள் குறித்தும்ஆலோசித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி, சமூகநலம் உட்பட பல்வேறு துறைகள் சார்பில்ஏற்கெனவே பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துவது, இவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொழில் திட்டங்கள்

சென்னையில் 2019 ஜனவரியில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ.3 லட்சத்து 501 கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, தற்போது வரை 53 திட்டங்களில் உற்பத்தி தொடங்கியுள்ளது. 219 திட்டங்களுக்கான பணிகள் பல்வேறு கட்டங்களில் நடந்து வருகின்றன.

இதுதவிர, முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டு, ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டனர். இதுதொடர்பான திட்டங்களும் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் கடந்த 13-ம் தேதி நடந்த தொழில் வழிகாட்டி மற்றும் ஒற்றைச்சாளர அனுமதி தொடர்பான கூட்டத்தில், ரூ.6,608 கோடி மதிப்பிலான தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இவற்றில் 14-க்கும் மேற்பட்ட புதிய திட்டங்கள், விரிவாக்கத் திட்டங்களுக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிப்காட் தொழிற்பேட்டைகளில் தொழில் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு வழங்குவது மட்டுமின்றி, தென் மாவட்டங்களில் 6 புதிய தொழில் நிறுவனங்கள் அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் குறிப்பாக, ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அல்கெராபி என்ற நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, சீனாவின் வின்டெக் என்ற மின்சார வாகனம் தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை அமைக்கவும், அதற்கான இடத்தை ஒதுக்கியும் தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x