

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகளை செய்வதுடன், தமிழகஅரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டுமென முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வதுபிறந்தநாள் பிப்ரவரி 24-ம் தேதிவருகிறது. இதை சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாக ஜெயலலிதா பேரவையின் ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அவைத் தலைவர் மதுசூதனன், அமைப்பு செயலாளர் வைத்திலிங்கம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, ‘‘ஜெயலலிதாவின் பிறந்தநாளில், அதிமுக நிர்வாகிகள் தங்களால் இயன்ற நலத்திட்ட உதவிகளை ஏழை, எளிய மக்களுக்குச் செய்ய வேண்டும். மேலும், தமிழக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்’’ என்றார்.
ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, ‘‘தன்னுடைய பிறந்தநாளன்று ஏழை மக்களுக்கு உதவி செய்திட வேண்டுமென அன்பு கட்டளையிட்டவர் ஜெயலலிதா. எனவே, அவரின் பிறந்தநாளில் பல்வேறு சமூக நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும்’’ என்றார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளை ஆண்டுமுழுவதும் இளைஞர் எழுச்சி நாளாககடைபிடிப்பது. ஏழை எளியோருக்கும், மாணவ மாணவியருக்கும், விவசாயிகளுக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது. அன்னதானம், ரத்ததானம், கண்தானம்,உடல் உறுப்பு தானம் செய்தல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல், ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு இலவச திருமணங்களை நடத்தி வைக்கவேண்டும்.
காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம், காவிரி - அக்னியாறு - தெற்கு வெள்ளாறு - வைகை-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டம், மேட்டூர் அணையின் உபரிநீரை சேலம் மாவட்டத்தின் 100ஏரிகளில் நிரப்பும் திட்டம், தமிழகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணையும் கட்டுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
5 புதிய மாவட்டங்கள் உருவாக்கம், ரூ.1000 பொங்கல் பரிசு, அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை சுமார் ரூ.1600 கோடி செலவில் நிறைவேற்ற பணிகளை விரைந்து மேற்கொண்டிருக்கும் முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரவுள்ள நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுக வெற்றிக்கு உழைப்பது என்பன உட்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.