

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தும் முன்பு மக்கள் கருத்தை அறிய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் கூறியிருப்பதாவது:
நிலப் பகுதியிலும், கடலுக்குள்ளும் எண்ணெய், இயற்கை எரிவாயு எடுப்பதற்காக ஆய்வு செய்தல், உற்பத்தி மற்றும் மேம்பாடு ஆகியவை வகைப்பாடு ‘ஏ’ என குறிப்பிடப்பட்டு, அதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வெளியிட வேண்டும்என்று கடந்த 2006-ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவிக்கை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த ஜனவரி 16-ம் தேதி மத்திய அரசின் அறிவிக்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, கடல் மற்றும் நிலப்பரப்பில் எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தி, மேம்பாடு வகைப்பாடு ‘ஏ’ திட்டங்கள் என்றும், ஆய்வு செய்வதை வகைப்பாடு ‘பி-2’ திட்டங்கள் என்றும் பிரித்துள்ளது. இதில், ‘பி-2’ திட்டங்களுக்கு மக்களின்கருத்துகளை அறியத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
ஹைட்ரோகார்பன் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது. தமிழக நெல்விளைச்சலின் தாய்ப் பகுதியாகவும்,சூழலியல் சார்ந்த பகுதியாகவும் உள்ள காவிரி டெல்டா பகுதிகளில்தான் அதிக அளவில் எண்ணெய், இயற்கை எரிவாயு திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. எனவே, விவசாயிகள் இத்திட்டங்களை எதிர்க்கின்றனர். திட்டங்களை செயல்படுத்தும் முன், சம்பந்தப்பட்ட மக்களையும், மாநில அரசையும் ஆலோசிப்பது அவசியம். அப்போதுதான் மக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் உறுதி செய்யப்படும். எனவே, தமிழகத்தின் தற்போதைய சூழலை கருத்தில்கொண்டு காவிரி டெல்டா பகுதிகளில் எண்ணெய், இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டங்களில் மக்கள் கருத்தை அறியும் வகையில் முந்தைய அறிவிக்கையை செயல்படுத்த வேண்டும்.