Published : 21 Jan 2020 06:59 AM
Last Updated : 21 Jan 2020 06:59 AM

திருவள்ளுவர் திருநாள், சித்திரை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 45 தமிழறிஞர்களுக்கு விருதுகள்: முதல்வர் பழனிசாமி வழங்கி கவுரவித்தார்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்ற திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் விருதுகள் பெற்ற விருதாளர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்.படம்: பு.க.பிரவீன்

சென்னை

திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நேற்றுநடைபெற்றது. இதில் 45 தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி முதல்வர் பழனிசாமி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் முன்னிலை உரையாற்றினார். பின்னர், முதல்வர் பழனிசாமி தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கிப் பேசியதாவது:

உலகளவில் தொன்மையான மொழிகளில் ஏட்டளவிலும் பேச்சளவிலும் இன்றைக்கும் நிலைத்து வாழும் மொழி தமிழ் மொழி. இத்தகைய பெருமை வாய்ந்த மொழியின் தலைசிறந்த நூலான திருக்குறளை உலகுக்கு வழங்கியவர் தெய்வப் புலவர் திருவள்ளுவர். திருக்குறள் மற்றும் திருவள்ளுவரின் பெருமையை உலகறியச் செய்யவும் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வளர்ந்து வரும் தமிழ் அறிஞர்கள் பொறுமையுடன் காத்திருந்து, தங்களது திறமையை நிரூபித்தால் உரிய நேரத்தில் விருது கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, "திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் சிறப்புச்சேர்த்து, புகழ் பரப்பவும் தமிழ்இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சென்று பெருமைப்படுத்தவும் தமிழுக்கு தொண்டு செய்து தமிழ் மொழியை அழியாது காத்து, மென்மேலும் வளர்ச்சி காணவும் எண்ணற்ற திட்டங்களை எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் செயல்படுத்தினார்கள். தற்போதைய அரசும் அவர்களது ஆக்கப்பூர்வமான தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது" என்றார்.

விருதுகள் பெற்றவர்களின் விவரம்: நித்யானந்த பாரதிக்கு திருவள்ளுவர் விருது, செஞ்சி ந.ராமச்சந்திரனுக்கு பெரியார் விருது, க.அருச்சுனனுக்கு அம்பேத்கர் விருது, கோ.சமரசத்துக்கு அண்ணா விருது, மா.சு.மதிவாணனுக்கு காமராஜர் விருது, ப.சிவாஜிக்கு பாரதியார் விருது, த.தேனிசை செல்லப்பாவுக்கு பாரதிதாசன் விருது, சே.சுந்தரரராஜனுக்கு திரு.வி.க.விருது, டாக்டர் மணிமேகலைக் கண்ணனுக்கு கி.ஆ.பெ.விசுவநாதம் விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு விருதாளருக்கும் தலாரூ.1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பவுன் தங்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியன வழங்கப்பட்டன.

மலேசியாவைச் சேர்ந்த பெ.ராசேந்திரனுக்கு இலக்கிய விருது, பிரான்ஸைச் சேர்ந்த முத்து கஸ்தூரிபாய்க்கு இலக்கண விருது, இலங்கையைச் சேர்ந்த சுபதினி ரமேஷுக்கு மொழியியல் விருது, சிகாகோ தமிழ்ச் சங்கத்துக்கு தமிழ்த்தாய் விருது ஆகியவை வழங்கப்பட்டன. இதுதவிர, சிறந்த மொழி பெயர்ப்பாளர்களுக்கான விருதும் கலைச் செம்மல் விருதும் வழங்கப்பட்டன. மேலும்,நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டதற்காக 7 தமிழ் அறிஞர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்பட்டது.

தமிழ்த்தாய் விருது பெற்ற சிகாகோ தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த மணி குணசேகரன், கம்பர் விருது பெற்ற சரஸ்வதி ராமநாதன், சொல்லின் செல்வர் விருது பெற்ற கவிதாசன் ஆகியோர் ஏற்புரையாற்றினர்.

முன்னதாக அரசு தலைமைச் செயலாளர் க.சண்முகம் வரவேற்றார். நிறைவில், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன் நன்றி கூறினார். விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள், அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x