

தமிழகம் முழுவதும் போலியோ மருந்து கொடுக்காத குழந்தைகளைக் கண்டறிவதற்காக சுகாதாரத்துறை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்காக வீட்டின் முகப்பில் குறியீடு செய்து தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாடுமுழுவதும் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கான முகாம் நடைபெற்றது. தமிழகத்தில் இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 7 முதல் மாலை 5 மணி வரை இந்த மையங்கள் செயல்பட்டன.
பொங்கல் விடுமுறை பயணங்களில் பலரும் இருந்ததால் அவர்களின் குழந்தைகள் பலன்பெறும் வகையில் பேருந்துநிலையம், ரயில்நிலையம், விமான நிலையம், சோதனைச் சாவடிகள் எனக் கூடுதலாக 1,632 மையங்கள் அமைக்கப்பட்டு அங்கும் சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.
இதில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள 70.50 லட்சம் குழந்தைகளில் 66.41 லட்சம் குழந்தைகளுக்கு அதாவது 94.2 சதவீத குழந்தைகளுக்கு ஒரே நாளில் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
இருப்பினும் நூறு சதவீதத்தை இலக்காக கொண்டு இப்பணி நடைபெற்று வருகிறது. உடல்நலக்குறைவு, வெளியூர் பயணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் மீதம் உள்ள குழந்தைகளுக்கு பெற்றோர்கள் சொட்டு மருந்து வழங்காமல் உள்ளனர்.
எனவே இது போன்ற குழந்தைகளைக் கண்டறியும் வகையில் அங்கன்வாடி மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் இன்று முதல் களப்பணியில் இறங்கியுள்ளனர்.
இதன்படி தங்கள் எல்லைக்கு உட்பட்ட மழலையர் பள்ளிகளுக்குச் சென்று சுண்டுவிரலில் வைக்கப்பட்ட மையின் அடையாளத்தை வைத்து குழந்தைகளைக் கண்டறிந்து மருந்து கொடுக்கின்றனர்.
மேலும் ஒவ்வொரு வீடாகச் சென்று ஆய்வுப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு செல்லும் இக்குழுவினர் வீடுகளில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தை உள்ளனவா? அப்படி இருந்தால் அந்தக் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளதா? போன்ற விபரங்களைச் சேகரிக்கின்றனர்.
மருந்து கொடுக்கவில்லை என்றால் தாங்கள் கொண்டு சென்றுள்ள மருந்துப் பெட்டியில் இருந்து சொட்டு மருந்தை எடுத்து குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.
பின்பு மருந்து கொடுக்கப்பட்ட வீடு என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆங்கிலத்தில் 'பி' என்று வீட்டின் முகப்பில் குறியீடு செய்து ஆய்வு செய்த வீட்டின் எண்ணிக்கை மற்றும் தேதிகளை எழுதுகின்றனர்.
வீடுகள் தொடர்ந்து பூட்டியிருந்தாலோ, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இல்லாத வீடுகள் என்றாலோ அந்த வீட்டில் ஆங்கிலத்தில் 'எக்ஸ்' குறியீடு இடப்படுகிறது.
இப்பணி நாளையும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இது போன்ற தொடர் நடவடிக்கை மூலம் தமிழகம் முழுவதும் 100 சதவீத போலியோ இல்லாத இலக்கை அடைய திட்டமிடப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.