Published : 20 Jan 2020 04:58 PM
Last Updated : 20 Jan 2020 04:58 PM

பெரியார் குறித்த பேச்சு; ரஜினி தவிர்த்திருக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் 

பரட்டை பத்த வச்சது இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. ரஜினி பழைய கதைகளைப் பேசியிருக்கக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

துக்ளக் படவிழாவில் நடிகர் ரஜினி பேசிய பேச்சு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி பெரியார் குறித்துப் பேசியதும், முரசொலி குறித்துப் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இரண்டு பிரச்சினைகள் குறித்தும் ரஜினி தரப்பில் இதுவரை வாய் திறக்கவில்லை.

இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது எதிர்ப்பைக் காண்பித்தார். முரசொலி பத்திரிகையும் ரஜினியைக் கண்டித்தது. ரஜினி சொந்தமாகப் பேசியதால்தான் பிரச்சினை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

மறுபுறம் பெரியார் குறித்து ரஜினி கூறியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியார் திக, திவிக உள்ளிட்ட கட்சிகள் போலீஸில் புகார் அளித்தன.

இந்நிலையில் ரஜினியின் பேச்சு குறித்து அதிமுகவில் யாரும் வாய் திறக்காத நிலையில், இன்று அமைச்சர் ஜெயக்குமார் ரஜினிக்கு அறிவுரை சொல்லும் விதமாகப் பேட்டி அளித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

“ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டன. சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சினை வந்தபோது பிள்ளையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல் ஸ்டாலின் பேசினார். அதற்கு முதல்வர் சரியாக பதிலளித்தார்.

ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் மக்களைத் திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களுக்கு மாநில அரசு ஒப்புதல் அளிக்காது. மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் தமிழக அரசு ஆதரிக்காது. மாநில அரசின் இசைவு முக்கியம். அதை மாநில அரசு கொடுக்கவில்லை, கொடுக்கவும் கொடுக்காது''.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

துக்ளக் பொன்விழாவில், பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ''பரட்டை பத்த வச்சது இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த். பழைய கருத்துகளைப் பேசி இருக்கக்கூடாது. எதிர்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்று ஆக்கபூர்வமாகப் பேசவேண்டும். இந்தப் பேச்சை அவர் தவிர்த்திருக்க வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x