

மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாற்றுத் திறனாளிகள் நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் தங்கள் உடலை வருத்திக் கொண்டு 4 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகின்றனர்.
கடந்த 6-ம் தேதி நான் அவர்களை நேரில் சந்தித்து அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்று கூறி, அவர்கள் இந்த போராட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக் கொண்டேன். கடந்த இரு தினங்களாக பல்வேறு அரசியல் கட்சிகள் அவர்களை சந்தித்து பேசி கொண்டிருக்கின்றார்கள்.
மறைந்த சசிபெருமாள் அவர்களது உடலை அவர்களது உறவினர்கள் பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்கு செய்துவிட்டு தங்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்கள். மாற்றுத் திறனாளிகளுடைய உண்ணாவிரதம் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களிடமும் ஒரு தாக்கத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மாற்றுத் திறனாளி நண்பர்கள் இந்தப் புனிதப் பணியை மக்கள் மத்தியில் அறிவுரை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்களது சமுதாயப் பணியை தொடர வேண்டும். மாற்றுத் திறனாளிகள் தங்களின் உண்ணாவிரதத்தை உடனே முடித்துக் கொள்ள வேண்டும்'' என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.