

வாழப்பாடி அருகே மூடியிருந்த டாஸ்மாக் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில், உள்ளே தூங்கிக் கொண்டிருந்த விற்பனையாளர் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதை யடுத்து, நேற்று சேலம் மாவட் டத்தில் உள்ள 264 டாஸ்மாக் கடைகளை மூடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், தலை வாசலை அடுத்த நாவலூரைச் சேர்ந்தவர் செல்வம்(40). இவரது மனைவி ராதா. இவர்களுக்கு தாமோதரன் என்ற மகனும், சுவேதா என்ற மகளும் உள்ளனர். செல்வம் வாழப்பாடியை அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.
செவ்வாய்கிழமை இரவு அவர் கடையில் தங்கியிருந்தபோது, அதிகாலை 12 மணியளவில் கடை ஷட்டர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில், கடையின் உள்ளே பெட்ரோல் வழிந்தோடி தீ பிடித்ததில் மது பாட்டில்கள் வெடித்து சிதறி எரியத் தொடங்கின.
தகவல் அறிந்த வாழப்பாடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மேலும், தீ பரவாமல் தடுத்தனர். எனினும், கடையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் சேதமடைந்தன. இதற்கிடையில் கடையின் உள்ளே மயங்கிய நிலையில் கிடந்த செல்வத்தை மீட்ட தீயணைப்புத் துறையினர், உடனடியாக அவரை அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு செல்வம் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
செல்வத்தின் தந்தை துக்கப்பிள்ளை (65) வாழப்பாடி போலீஸில் புகார் செய்தார். போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து, இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விற்பனையாளர் செல்வம் உயிரிழந்ததைத் தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்கள் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 264 டாஸ்மாக் கடை மற்றும் பார்களை நேற்று மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், உயிரிழந்த செல்வம் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக் கையை நிறைவேற்றினால் மட்டுமே செல்வத்தின் உடலை பெறுவோம் எனக் கோரி சேலம் அரசு மருத்துவமனையை டாஸ்மாக் கடை ஊழியர்கள் முற்றுகையிட்டனர். உடலை ஒப்படைப்பது குறித்து நேற்று மாலை வரை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடையில் தூங்கியது ஏன்?
டாஸ்மாக் கடைகளின் பாதுகாப்பு கருதி, கடை ஊழியர் ஒருவர் இரவு நேரத்தில் கடையில் தங்க வேண்டும் என காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளதன் காரணமாகவே செல்வம் கடைக்குள் இரவு தங்கினார் என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர்.