

திருப்பரங்குன்றம் அருகே மனிதக் கழிவுகளால் பள்ளியை அசுத்தம் செய்த சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை கோரி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவைச் சேர்ந்த சிந்தாமணி கிழக்குத் தெருவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.
இங்கு ஒரு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 85 மாணவர்கள் பள்ளியில் படித்து வருகின்றனர்.
பொங்கல் விடுமுறையை ஒட்டி ஐந்து நாட்கள் விடுமுறைக்குப் பின் இன்று (ஜன.20) பள்ளி திறக்கச் சென்ற ஆசிரியர் மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
பள்ளியில் இருந்த தேசியக் கொடி கம்பம் அருகே மற்றும் வகுப்பறை கட்டிடம் ஆகிய இடங்களில் சில சமூக விரோதிகள் மனிதக் கழிவுகளால் அசுத்தம் செய்துவைத்திருந்தனர்.
இதனைக் கண்ட மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் உட்பட அனைவரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். இது போன்ற சம்பவம் பள்ளி வளாகத்தில் நடப்பது இது முதன்முறை அல்ல என்பதால் ஆசிரியர்களும், மாணவர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
இதனை அறிந்த அவனியாபுரம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
சமுக விரோதிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்ததன் பேரில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக பள்ளி தொடங்கியது.
இது குறித்து பள்ளி தரப்பில், "எங்களின் பள்ளியைச் சுற்றிலும் முட்புதர்கள் உள்ளன. இதனை அப்புறப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. அந்த முட்புதர்களையே பலரும் திறந்தவெளிக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற தொடர் விடுமுறை விடப்படும் வேளையில் சமூகவிரோதிகள் பள்ளி வளாகத்தையே கழிப்பிடமாக மாற்றிவிடுகின்றனர்.
இதனை பலமுறை கண்டித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று ஆசிரியர்கள் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டோம். அருகிலிருக்கும் முட்புதர்களை அப்புறப்படுத்துவதே இப்பிரச்சினைக்கு தீர்வாகும்" எனக் கூறப்பட்டது.