

அம்மா சிமென்ட் விற்பனை திட்டத் தின் மூலம் கடந்த 7 மாதங்களில் 6 லட்சத்து 61 ஆயிரத்து 472 மெட்ரிக் டன் சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அ.சவுந்தரராஜன், கே.பாலபாரதி, க.பாலகிருஷ்ணன், கே.தங்கவேல், ஏ.லாசர், ப.டில்லி பாபு, இரா.அண்ணாதுரை, க.பீம் ராவ், ஆர்.ராமமூர்த்தி, வி.பி.நாகை மாலி ஆகியோர் கொண்டுவந்த பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் தங்கமணி கூறியதாவது:
சிமென்ட் விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கும் பொருட்டு அம்மா சிமென்ட் விற்பனைத் திட்டம் கடந்த ஜனவரி 5-ம் தேதி ரங்கத்தில் தொடங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 470 கிடங்குகளில் சிமென்ட் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டு ஒரு மூட்டை ரூ.190-க்கு விற்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 22 மாவட்டங்களில் ஊராட்சித் துறையின் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் மூலம் அதிகபட்சம் 1,500 சதுர அடிக்கு 750 மூட்டைகள் வரை சலுகை விலையில் சிமென்ட் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளை புதுப்பிக்க 10 முதல் 100 மூட்டைகள் வரை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் சிமென்ட் பெறுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டிட வரைபடத்தையோ அல் லது கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த் துறை அலுவலர், பஞ்சாயத்து யூனியன் மேற் பார்வையாளர், பஞ்சாயத்து யூனியன் சாலை ஆய்வாளரின் சான்றிதழையோ சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் வரைவோலை மூலமே பணம் செலுத்தி சிமென்ட் வாங்க முடியும். இத்திட்டத்தின் பயனாளிகள் விவரங்கள் கணினி மூலம் பதிவு செய்யப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் கடந்த 7 மாதங்களில் 6 லட்சத்து 82 ஆயிரத்து 768 மெட்ரிக் டன் சிமென்ட் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 6 ஆயிரத்து 755 பயனாளிகளுக்கு 6 லட்சத்து 61 ஆயிரத்து 472 மெட்ரிக் டன் சிமென்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.