தினகரன்: கோப்புப்படம்
தினகரன்: கோப்புப்படம்

ஹைட்ரோகார்பன் திட்டம் : காவிரி டெல்டா பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து; தினகரன் கண்டனம்

Published on

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க ஏற்கெனவே உள்ள விதிகளின்படி, சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை அவசியம் பெற வேண்டும். மேலும், கிணறு அமைக்கப்பட உள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அவர்களின் கருத்துகளை பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில், பழைய விதிமுறைகளை திருத்தி மத்திய அரசு புதிய அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஹைட்ரோகார்பன் ஆய்வு கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவையில்லை. மேலும், பொதுமக்களிடமும் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த தேவையில்லை.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தினகரன் இன்று (ஜன.20) தன் ட்விட்டர் பக்கத்தில், "ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட வேளாண் பகுதிகளைச் சீரழித்துவிடும் ஆபத்து நிறைந்த இந்த உத்தரவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களைப் பெயரளவுக்கு மட்டுமே எதிர்த்து வரும் அதிமுக அரசும், அதிக எம்.பி.க்களை வைத்திருக்கின்ற திமுகவும் மத்திய அரசின் இந்நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த தேவையான முயற்சிகளை உண்மையான அக்கறையோடு மேற்கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in