Last Updated : 20 Jan, 2020 10:35 AM

 

Published : 20 Jan 2020 10:35 AM
Last Updated : 20 Jan 2020 10:35 AM

பழநி பாதயாத்திரையின்போது உயிரிழப்புகள் தடுக்கப்படுமா?: திண்டுக்கல் - பழநி இடையே இருப்பதுபோல் தனி நடைபாதை அமைக்க வலியுறுத்தல்

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகவும், பாதயாத்திரை செல்லும் ஒரே ஸ்தலமாகவும் பழநி மலை உள்ளது. தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய நேரங்களில் மட்டுமே பக்தர்கள் பாதயாத்திரை சென்று வந்த நிலை மாறி, தற்போது ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் தொடங்கி கோடை காலத்தில் அக்னி நட்சத்திர கழிவு எனப்படும் நாட்களான அக்னி வெயில் நிறைவு பெறும் மே மாதம் வரை 6 மாதங்களுக்கும் பாதயாத்திரை தொடர்கிறது.

தைப்பூச விழா, பங்குனி உத்திர விழா மற்றும் பிற சீசன் நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர்.

குறிப்பாக திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர். நடப்பு ஆண்டு, கடந்த டிசம்பர் தொடங்கி பாதயாத்திரை சீசன் தொடர்கிறது.

பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவதே உயிரிழப்புக்கு காரணமாக உள்ளது. கடந்த 16-ம் தேதி இரவுகூட, திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே சாலையோரமாக சென்ற பக்தர்கள் குழுவினர் மீது, சொகுசு கார் மோதி சிறுவன் உட்பட பக்தர்கள் இருவர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

பாதயாத்திரை செல்லும் பக்தர்களில் பெண்கள், சிறுவர், சிறுமியர் என பல்வேறு வயதினரும் இருப்பதால், பக்தர்களின் பாதுகாப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

முதலில் நீலகிரி மக்கள்

இதுதொடர்பாக, 93-வது ஆண்டாக பழநிக்கு பாதயாத்திரை செல்லும் திருப்பூர் (விஜயாபுரம்) பாதயாத்திரை குழுவின் தலைவர் ஆர்.கே.கே.எம்.சபாபதி, ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியதாவது:

முன்னோர் காலத்தில் தைப்பூசம், பங்குனி உத்திர நிகழ்வுகளுக்கு மட்டுமே பாதயாத்திரை நடைபெறும். ஆனால், தற்போது டிசம்பர் முதல் மே மாதம் வரை பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்கின்றனர். டிசம்பர் மாதத்தில், நீலகிரி மாவட்ட மக்கள் தான் முதற்கட்டமாக பாதயாத்திரையை தொடங்குகின்றனர். டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி ஆகிய 3 மாதங்களில் அதிகளவில் பக்தர்கள்கூட்டம் இருக்கும். மார்ச், ஏப்ரல், மே இறுதிவரை, பேட்ஜ், பேட்ஜ்-ஆக பாதயாத்திரை மேற்கொள்கின்றனர்.

தொடக்கத்திலேயே உயிரிழப்புகள்

அனைவரும் மாநில, தேசிய நெடுஞ்சாலைகளை பயன் படுத்துவதால், விபத்துகளில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதே எங்களது முக்கிய நோக்கம்.

கடந்த ஆண்டு, திருப்பூர் மாவட்டத்தில் பக்தர்கள் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படாத நிலையில், நடப்பு ஆண்டு சீசன் தொடக்கத்திலேயே சாலை விபத்தில் பக்தர்கள் உயிரிழப்பு தொடங்கிவிட்டது. இந்த சம்பவம், இதோடு தடுக்கப்பட வேண்டும்.

தொய்வில்லா நடவடிக்கை

பக்தர்கள் பாதயாத்திரை செல்லும்போது, அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறையினர் சார்பில் ஒளிரும் பட்டைகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை வழங்குதல், ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை தொய்வின்றி செய்ய வேண்டும். அனைத்து பக்தர்களும், சாலை விதிகளை அறிந்திருக்க மாட்டார்கள் என்பதால், உரிய விழிப்புணர்வு அளிக்க வேண்டும். குறிப்பாக, பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் வசதிக்காக திண்டுக்கல் - பழநி இடையே இருப்பதுபோல், பிற முக்கிய வழித்தடங்களில் தனி நடைபாதை அமைத்துக் கொடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை

‘தங்குவதற்கான ஓய்வு இடங்களை சாலையோரமாக அமைக்க வேண்டும். தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும்' என்கின்றனர் பக்தர்கள்.

முழு நேரம் ரோந்து

மாவட்ட காவல் கண்காணிப் பாளர் திஷா மித்தல் கூறும்போது, 'திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 90 கிலோ மீட்டர் தூரம்பல்வேறு பகுதிகளில் பழநி பாதயாத்திரைக்கான வழித்தடங்கள் வருகின்றன.

இதில், விபத்து உயிரிழப்பு களைத் தடுக்க, பாதயாத்திரை செல்வோருக்கு ஒளிரும் பட்டைகள், சட்டைகள், கைத்தடிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் தங்க தற்காலிக பந்தல்கள் அமைக்கப் பட்டுள்ளன. முழுநேர ரோந்துப் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்த துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமை யில், உரிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x