Published : 20 Jan 2020 10:32 AM
Last Updated : 20 Jan 2020 10:32 AM

வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு சுமூகத் தீர்வு வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

வங்கி ஊழியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகள் சம்பந்தமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜன.20) வெளியிட்ட அறிக்கையில், "நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் வருகின்ற ஜன.31 மற்றும் பிப்.1 ஆகிய இரு தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக வங்கி ஊழியர்களின் அமைப்பு, 12.25 சதவீத சம்பள உயர்வு, வங்கி இணைக்கப்படக் கூடாது என்றும் இணைக்கப்படும்போது அளிக்கப்படும் சிறப்புக் கொடுப்பனவு தொகையை அடிப்படை சம்பளத்தில் இணைப்பு மற்றும் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளுக்கும் கட்டாயம் 5 நாள் வேலைநாள், வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு முன்வைக்கின்றனர்.

வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு உள்பட 5 சங்கங்கள் கடந்த 8 ஆம் தேதி அன்று நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு இந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை ஜனவரி 31 ஆம் தேதியும், பட்ஜெட் அறிக்கையை பிப்ரவரி 1 ஆம் தேதியும் தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு முக்கிய நாட்களிலும் வங்கிப்பணிகள் தடைபட்டால் வங்கி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதோடு, வங்கியால் கிடைக்கும் வருவாயும் கிடைக்காத நிலை ஏற்படும். மேலும் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான காசோலை பரிவர்த்தனையும் பாதிக்கப்படும்.

இந்தியாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்ற வங்கித்துறையில் உள்ள வாராக்கடன், நிர்வாகம், வர்த்தகம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கும் வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கும் மத்திய அரசு நல்ல தீர்வு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். காரணம் பல ஆண்டுகளாக வங்கி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு இன்னும் முழுமையான சுமூகத் தீர்வு ஏற்படாத நிலையில் இனியும் இப்பிரச்சினை நீடிக்கக்கூடாது.

எனவே நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் சங்கங்கள் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய 2 தேதிகளில் நடத்த இருப்பதாக அறிவித்திருக்கின்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறாமல் இருக்கவும், வங்கிப்பணிகள் தடையில்லாமல் தொடரவும், வருவாய் ஈட்டுவது தொடரவும், வங்கி ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறவும், வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் மத்திய அரசு வங்கி ஊழியர்கள் சங்கத்தினரிடம் உடனடி பேச்சு வார்த்தையில் மத்திய அரசு ஈடுபட வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x