

குடியுரிமை சட்டம் குறித்துமுதல்வர் சட்டப்பேரவையில்விளக்கம் அளித்துள்ளார். சிறுபான்மை மக்களை பாதிக்கக்கூடிய அம்சங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
இதுகுறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி சென்னையில் கட்டபொம்மன் சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.
தஞ்சை கோயில் குடமுழுக்கைசம்பிரதாயப்படி நடத்த அரசு முடிவு எடுக்கும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்று கூறப்படுவது ஸ்டாலினுக்குத்தான் பொருந் தும்.
திமுக ஆட்சியில் இருந்தபோது பல்வேறு கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது தமிழில்தான் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கூறி முன்மாதிரியாக நடத்தியிருந்தால் பாராட்டுக்குரியதாக இருக்கும்.
சமூகமும், அரசியலும் கெட்டுப்போய்விட்டது என ரஜினி பேசியுள்ளார். இப்படி பேசும் அவர்ஏன் அரசியலுக்கு வர நினைக்கிறார்? கமலுக்கு வரலாறும் தெரியவில்லை, அரசியலும் தெரியவில்லை. அரைகுறையாகப் பேசிவருகிறார்.
குடியுரிமை சட்டம் பற்றி முதல்வர் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்துள்ளார். சிறுபான்மை மக்களை பாதிக்கக்கூடிய அம்சங்களை தமிழக அரசு ஏற்காது, நடை முறைப்படுத்தாது.
திமுகவுடனான கூட்டணியில் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிதான் கூறினார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு வங்கி இல்லை என்று துரைமுருகன் கூறிவிட்டார். வீட்டை விட்டு வெளியே போங்கள் என்று கூறிய பின்னர், மீண்டும் அந்த வீட்டுக்குள் போவது என்ன தன்மானம் என்பதை காங்கிரஸ்காரர்கள்தான் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.