Published : 20 Jan 2020 08:33 AM
Last Updated : 20 Jan 2020 08:33 AM

எஸ்.ஐ. வில்சன் கொலையில் தொடர்புடையோருக்கு போலி முகவரியில் சிம்கார்டு விற்பனை செய்த 9 பேர் காஞ்சியில் கைது: கொலை வழக்கில் கைதானோர் இன்று குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்

காஞ்சிபுரம் / நாகர்கோவில் / கோவை

கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்களுக்கு, காஞ்சிபுரத்தில் சிம்கார்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, சிம்கார்டு ஏஜென்சி பணியாளர் உட்பட 9 பேரை க்யூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

களியக்காவிளை உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில்தொடர்புடையவர்கள், கொலை சம்பவத்துக்கு முன்பாக காஞ்சிபுரம்நகரில் தங்கியிருந்து காமாட்சி அம்மன் கோயில் சன்னதி தெருவில் உள்ள தனியார் சிம்கார்டு ஏஜென்சி ஊழியர்களிடம் கூடுதலாக பணம் செலுத்தி சிம்கார்டு வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு க்யூ பிராஞ்ச் போலீஸார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து தொலைத் தொடர்பு நிறுவனத்தின் டீலர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்கண்ட ஏஜென்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சையப்பன், ராஜேஷ், காஜா மொய்தீன் உட்பட 5 பேர் மீது போஸீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர, போலி முகவரிஅளித்து 200-க்கும் மேற்பட்டசிம்கார்டுகளை பணத்துக்காக விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன்பேரில், நேற்று மேலும் 4 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே காஞ்சிபுரத்தில் சட்டவிரோதமாக யாரேனும் தங்கி உள்ளார்களா என போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய கோயில் களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் மற்றும் மோப்ப நாய் மூலம் சோதனை மேற்கொண்டு, தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்களை கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.

நீதிமன்றத்தில் இன்று ஆஜர்

எஸ்.ஐ. வில்சன் கொலையில்கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ஷமீம்(32), தவுபீக்(28) ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைகிறது.

எனவே, இருவரும் இன்று கமாண்டோ படை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் மதியம் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இருவரையும் 15 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி ஏற்கெனவே போலீஸார் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி, கத்தி ஆகியவை இதுவரை கைப்பற்றப்படவில்லை. இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது, அதுபற்றிய தகவல்களை பெற போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

குழித்துறை நீதிமன்றத்தில் கடந்த 16-ம் தேதி அப்துல் ஷமீம், தவுபீக் சார்பில் ஆஜராக வந்த 3 வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டனர். அவர்கள் வந்த கார் அடித்து நொறுக்கப்பட்டது. இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க,நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

அப்துல் ஷமீமுக்கு ஆலோசனை வழங்கியதாக பெங்களூருவில் மெகபூப் பாஷாவை ஏற்கெனவே போலீஸார் கைது செய்துள்ளனர். எஸ்.ஐ. வில்சனை கொலை செய்யஇஜாஸ் பாஷாவிடம் துப்பாக்கி வாங்கி கொடுத்ததாக டெல்லியில் கைது செய்யப்பட்டவர் காஜா மொய்தீன். இவர் புதிய மென்பொருள்வசதியை பயன்படுத்தி தீவிரவாத குழு தலைவனுடன் பேசியதுதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.

அப்துல் ஷமீம், தவுபீக் மற்றும் மெகபூப் பாஷா ஆகியோரை காவலில் எடுத்து விசா ரிக்கும் போது இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

சர்ச்சை கருத்து பதிவிட்டவர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணத்தை சேர்ந்த நவாஷ் சாகுல் என்பவர், போலீஸாரால் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும், இவ்வழக்கில் போலி என்கவுன்ட்டர் நடத்த வாய்ப்புள்ளது என்றும் சர்ச்சையான கருத்துகளை முகநூலில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து மதமோதல்களை ஏற்படுத்த முயற்சித்தல், சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடையே பிரிவினையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் அவர் மீது புதுக்கடை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். நேற்று நவாஷ் சாகுல் கைது செய்யப்பட்டார்.

கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

களியக்காவிளை சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைப் பகுதியான முள்ளி, கோப்பநேரி, மாங்கரை, ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், வீரப்பகவுண்டனூர், கோபாலபுரம், நடுப்புனி, வடக்குகாடு, ஜமீன்காளியாபுரம், மீனாட்சிபுரம், செம்பனாம்பதி, வலுக்குப்பாறை உள்ளிட்ட இடங்களில் 14 சோதனைச் சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடிகளில் தலா ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி, பிஸ்டல் உள்ளிட்ட ஆயுதங்களும் வழங்கப்பட்டுள் ளன. அனைத்து சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x