முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்: பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை

முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்: பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை
Updated on
1 min read

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு கூடுகிறது. பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய முக்கிய திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

2020-21 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், பிப்.1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மார்ச் மாதம் தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கிய பட்ஜெட் என்பதால், இதில் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

பொதுவாக பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, அதில் இடம்பெறும்முக்கிய திட்டங்கள் குறித்து அமைச்சரவை கூடி முடிவுகளை எடுக்கும். அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடக்க உள்ளது. இதில், பட்ஜெட்டில் துறைகள் வாரியாக முக்கியமான அறிவிப்புகள் வெளியிடுவது தொடர்பாக முடிவெடுக்கப்படும்.

மேலும், மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிகிறது. இதுதவிர, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

சமீபத்தில் 15 தொழில் நிறுவனங்கள் ரூ.6,605 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்வதற்கான அனுமதியை முதல்வர் தலைமையிலான குழு வழங்கியது. இந்தநிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in