

‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்றஇலக்கை அடைவதற்கு பொதுமக்கள் அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
31-வது சாலைப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
பொதுமக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ‘சாலைப் பாதுகாப்பு வாரம்’ கடைபிடிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, 31-வது சாலைப் பாதுகாப்பு வார விழா ஜன.20முதல் 27-ம் தேதி வரை (ஜன. 26-ம்தேதி நீங்கலாக) கடைபிடிக்கப்படும். இதில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றல், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஓட்டுநர்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்துதல், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களைத் தயாரித்து திரையரங்குகளில் திரையிடுதல் மற்றும் ஈர்ப்பு இசை விளம்பரங்கள் தயாரித்து அகில இந்திய வானொலி மூலமாக பண்பலை சேனல்களில் ஒலிபரப்புதல், அவசர விபத்து சிகிச்சை மையங்கள் ஏற்படுத்துதல், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ரோந்து குழுக்கள் ஏற்படுத்தி போக்குவரத்து விதிமீறல்களைக் கண்காணித்து எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், சாலை பாதுகாப்புப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில், விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க சிறப்பான நடவடிக்கைகளை எடுக்கும் முதல் மூன்று மாவட்டங்களுக்கும், ஒரு சிறந்த காவல் துறை ஆணையரகத்துக்கும், முதல்வர் விருது வழங்குதல் போன்ற பல்வேறு சாலைப் பாதுகாப்பு திட்டங்களை, தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
தமிழக அரசு, மேற்கொண்ட பல்வேறு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக,2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2019-ம் ஆண்டில் ஏற்பட்ட சாலை விபத்துகள் 25.60 சதவீதமும், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் 43.10 சதவீதமும் குறைந்துள்ளன.
மேலும், ஒவ்வொரு 10 ஆயிரம்வாகனங்களுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000-ம் ஆண்டில் 19 நபர்கள் என்ற அளவிலிருந்து 2019-ம் ஆண்டில் 3 நபர்களாகக் குறைந்துள்ளது. அத்துடன், தமிழக அரசின் ‘108’ அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்கள், விபத்துகள் ஏற்படும் இடங்களுக்கு விரைவாகச் சென்று சேவை புரிவதால் விபத்தால் ஏற்படும் உயிரிழப்புகள் பெருமளவில் தடுக்கப்பட்டு வருகின்றன.
சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்கவும், ‘விபத்தில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை எய்தவும், மக்கள் அனைவரும் சாலை விதிகளை முழுமையாகக் கடைபிடித்து, தங்கள் பயணத்தை விபத்தில்லா பயணமாக அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.