

விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் வெளியூர் பயணத் துக்கு ரயில்களில் டிக்கெட் எடுப்பதில் கடும் போட்டி ஏற்படுகிறது. கடைசி நேரம் வரை டிக்கெட் உறுதியாகாமல் ஆர்ஏசி அல்லது காத்திருப்போர் பட்டியலில் பயணிகள் இருப்பார் கள். ரயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து, அது காத்திருப்போர் பட்டி யலில் (வெயிட்டிங் லிஸ்ட்) இருந்தால் அவர்கள் ரயிலில் பயணம் செய்ய முடியாது. கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் டிக்கெட்கள் ஆர்ஏசி, காத்திருப்போர் பட்டி யலில் இருப்பவர்களுக்கு உடனுக்குடன் ஒதுக்கீடு செய்யும் வகையில் புதிய மின்னணு கையடக்க கருவிகள் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு ஜனவரியில் மைசூரு, கோயம்புத்தூர் சதாப்தி விரைவு ரயில்களில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்துக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஏற்கெனவே உள்ள நடைமுறைப் படி டிக்கெட் பரிசோதகர்கள் ரயிலில் உள்ள பயணிகளின் டிக் கெட்களை பரிசோதனை செய்த பிறகே, பயணம் செய்யாத பய ணிகளின் பட்டியலை வழங்குவார். இதனால், கால தாமதம் ஏற்படும்.
இந்நிலையில், டிக்கெட் பரிசோதகர்களுக்கு மின்னணு கையடக்க கருவிகளை (ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல்) வழங்குவதால், டிக்கெட் பரிசோத கர்கள் இந்த கருவிகள் மூலம் காலியாகவுள்ள இடங்களின் அறிவிப்புகளை உடனுக்குடன் பெற முடியும். அதன்படி, காத்திருப்போர் பட்டியல், ஆர்ஏசி பட்டியல் பயணிகளுக்கு உடனடியாக டிக்கெட் ஒதுக்கீடு செய்ய முடியும்.
ஏற்கெனவே, 2 விரைவு ரயில்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக சென்னை சென்ட்ரல் - மதுரை துரந்தோ (வாரம் 2 முறை) விரைவு ரயிலில் அடுத்த வாரம் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த ரயிலில் செல்லும் டிக்கெட் பரிசோதகர்களுக்கு 4 கருவிகளை வழங்க உள்ளோம். இத்திட்டத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தொடங்கிவைக்க உள்ளார்’’ என்றனர்.