Published : 20 Jan 2020 07:57 AM
Last Updated : 20 Jan 2020 07:57 AM

கலாச்சார பெருமை வாய்ந்த தமிழ் உள்ளிட்ட தொன்மையான மொழிகளை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

தமிழ் உள்ளிட்ட தொன்மையான இந்திய மொழிகளை பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங் கய்ய நாயுடு தெரிவித்தார்.

சென்னையில் உள்ள செம்மொழி தமிழ் உயராய்வு மத்திய நிறுவனம் மற்றும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று பார்வையிட்டார்.

அப்போது, ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்டிருந்த தொல்காப்பியர் அரங்கம் உள்ளிட்ட 5 வகையான கண்காட்சிகள் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

தமிழரின் தொன்மையை எடுத்துரைப்பதற்கான அனைத்து அம்சங்களையும் இந்த 2 நிறுவனங்களும் ஆவணப்படுத்தி பாதுகாத்து வருவது சிறப்புக்குரியது. இதேபோல, தொழில்நுட்ப உதவியைக் கொண்டு இந்திய மொழிகளின் வளமான பாரம்பரியத்தை நாம் பராமரித்து மேம்படுத்த வேண்டும். ஏனென்றால், தலைமுறைகளுக்கு இடையே கலாச்சாரம், அறிவியல் ஆகியவற்றை கடத்தும் கருவியாக மொழி இருக்கிறது. எனவே, அனைவரும் தங்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆரம்பக்கல்வியை தாய்மொழியில் கற்பதுடன், வீடுகளில் தாய்மொழியில் பேச வேண்டும்.

திருக்குறளை அனைத்து இந்திய மொழிகள் மற்றும் சில வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்துள்ளது பாராட்டுக்குரியது.

இதேபோல, இதர தொன்மை யான தமிழ் படைப்புகளையும் மொழிபெயர்க்க வேண்டும். இதன்மூலம் அனைத்து மொழிகள் மற்றும் அதன் கலாச்சார சிறப்பை அனைத்து மக்களும் புரிந்துகொள்ள முடியும். மக்கள் இடையே இணக்கத்தை ஏற்படுத்தவும் இது உதவும்.

இவ்வாறு அவர் கூறினார். தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பாண்டியராஜன், பா.பெஞ்சமின் ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x