Published : 20 Jan 2020 07:16 AM
Last Updated : 20 Jan 2020 07:16 AM

விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுடன் பேரூராட்சி, நகராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல்: மாநகராட்சிகளுக்கு தனியாக நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்

புதிய மாவட்ட பிரிப்பு காரணமாக தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கும், பேரூராட்சிகள், நகராட்சிகளுக்கும் அடுத்த மாதம் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சென்னை உள்ளிட்ட 15 மாநகராட்சிகளுக்கு தனியாக தேர்தல் நடத்தவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் 2016-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ‘வார்டு மறுவரையறை முழுமையாக செய்யப்படவில்லை, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை, அவற்றை செய்து முடிக்கும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதையடுத்து, மனுதாரர் கோரிக்கையை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு ஆகிய பணிகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடித்து, அதன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 2019-ம் ஆண்டு டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது.

அதன்படி, ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாநில தேர்தல்ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கிடையே, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிதாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று கோரி திமுக மீண்டும் வழக்கு தொடர்ந்தது. அந்தவழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர இதர 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று உத்தரவிட்டது.

சம பலத்தில் வெற்றி

அதன்படி, 27 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கு கடந்த டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஒரு சில சம்பவங்களைத் தவிர தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி தொடங்கி 3-ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்தலில் திமுக கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியது. 27 மாவட்டங்களில் நடந்த மாவட்ட ஊராட்சித் தேர்தலில் அதிமுகவும், திமுகவும் தலா 13 இடங்களை கைப்பற்றின. சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் இரு கட்சிகளும் சம பலத்தில் வெற்றி பெற்றிருந்தன.

தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, கிராம ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளுக்கான தலைவர், துணைத் தலைவர் ஆகிய 5 பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 12-ம் தேதி நடந்தது. இதில், அதிமுக கூட்டணி 13 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளையும், திமுக 12 பதவிகளையும் கைப்பற்றின. சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலில் உள்ளூர் சூழலுக்கு ஏற்ப அதிமுக, திமுக கவுன்சிலர்கள் அணி மாறி வாக்களித்ததால் பல இடங்களில் வெற்றி வாய்ப்பும் கைமாறிப் போனது. வாக்குப்பெட்டியை தூக்கிச் சென்றது, தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உடல்நலக் குறைவு, போதிய கவுன்சிலர்கள் வருகை இல்லாதது போன்ற காரணங்களால் சில இடங்களில் மறைமுகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கு எப்போது தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு அரசியல்வாதிகளிடம் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் ஏற்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி புதிதாக பிரிக்கப்பட்ட திருநெல்வேலி, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகள் விரைவில் முடிந்துவிடும். அதையடுத்து 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளிலும், மாநிலம் முழுவதும் உள்ள 529 பேரூராட்சிகள், 125 நகராட்சிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்தல் தேதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படக் கூடும் என்று மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் சென்னை, ஆவடி, மதுரை, கோவை, சேலம், திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், வேலூர், திண்டுக்கல், தஞ்சாவூர், ஓசூர் ஆகிய 15 மாநகராட்சிகளுக்கு தனியாக தேர்தல் நடத்தவும் மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்துமனுக்கள் பெறுவது, தகுதியான வேட்பாளரைத் தேர்வு செய்வது, நேர்காணல் நடத்துவது என அடுத்தடுத்த பணிகளை விரைந்து மேற்கொள்ள கட்சிகள் நடவடிக்கை எடுத்துவருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x