

பெரியார் மீது அவதூறு பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி புதுச்சேரி காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
துக்ளக் விழாவில் “1971-ல் ராமன் சிலைக்கு செருப்பு மாலை போட்டு பெரியார் ஊர்வலம் சென்றார். அதை யாரும் பத்திரிகையில் போடவில்லை. சோ அதை அட்டைப்படத்தில் போட்டுக் கடுமையாகக் கண்டித்தார். அப்போது முதல்வர் கருணாநிதிக்குச் சிக்கல் உருவானது. அதன் பின்னர் பத்திரிகையை சீஸ் செய்தார்கள். அதற்கு அடுத்த வாரம் மீண்டும் அச்சடித்து கருப்பு நிறத்தில் அட்டை வெளியிட்டார் சோ. அந்தப் பத்திரிகை அதிக அளவில் விற்றது.
அதன்மூலம் பத்திரிகை உலகில் பிரபலமானார் சோ. அதற்குக் காரணமானவர் கருணாநிதி. அதற்கு அடுத்த இதழில் தங்கள் பத்திரிகையின் பப்ளிசிட்டி மேனேஜர் என்று கலைஞர் படத்தைப் பெரிதாகப் போட்டார் சோ” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையத்தில் தந்தை பெரியார் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் அய்யப்பன் மனு ஒன்றினை அளித்துள்ளார். அதில், கடந்த 14ம் தேதி நடைபெற்ற துக்ளக் பத்திரிக்கை விழாவில் ரஜினிகாந்த், தந்தை பெரியாரை பற்றி உண்மைக்கு புறமாக அவதூறாக பேசியிருப்பது பொது அமைதியை சீர்குலைக்கும் என்பதால் அவர் மீது உரிய பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.