தமிழகம், புதுச்சேரியில் இரு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
மாலத்தீவு அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
குமரிக் கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவி வருகிறது. அதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 2 செமீ, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை அளவுகளின்படி மலைப் பகுதிகளான கொடைக்கானலில் 10.2 டிகிரி, குன்னூரில் 12 டிகிரி, வால்பாறையில் 13 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. நிலப் பகுதிகளான நாமக்கல்லில் 19 டிகிரி, தருமபுரியில் 20 டிகிரி, தஞ்சாவூரில் 20.8 டிகிரி, கரூர் பரமத்தியில் 21 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
