Last Updated : 19 Jan, 2020 09:30 AM

 

Published : 19 Jan 2020 09:30 AM
Last Updated : 19 Jan 2020 09:30 AM

வெங்காயம் போல தக்காளி தட்டுப்பாடு வராமல் தடுக்க ஆண்டு முழுவதும் சீரான உற்பத்திக்கு நடவடிக்கை: கூடுதல் உற்பத்தியின்போது பதப்படுத்தவும், வத்தல், சாஸ் தயாரிக்கவும் ஏற்பாடு

சென்னை

வெங்காயம் போல தக்காளி தட்டுப்பாடு வராமல் தடுக்க ஆண்டு முழுவதும் சீரான உற்பத்தி செய்யவும், கூடுதல் உற்பத்தியின்போது பதப்படுத்தவும், வத்தல், சாஸ் போன்றவை தயாரிக்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நமது சமையலில் வெங்காயம் அளவுக்கு தக்காளியும் முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் வெங்காய உற்பத்தியில் கவனம் செலுத்தும் அரசு, தக்காளி உற்பத்தியையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 27,500 ஹெக்டேரில் (ஒரு ஹெக்டேர் என்பது இரண்டரை ஏக்கர்) தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது.

மழைக் காலமான நவம்பர், டிசம்பர் தவிர மற்ற 10 மாதங்கள் தக்காளி உற்பத்தியாகிறது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு,திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தக்காளி உற்பத்தி அதிகம்.

நெல் அறுவடை முடிந்ததும் போதிய தண்ணீர் இருந்தால் மீண்டும் நெல் சாகுபடி செய்கின்றனர். தண்ணீர் குறைவாக இருந்தால் பெரும்பாலான விவசாயிகள் தக்காளி சாகுபடிக்கு மாறுகின்றனர்.

ஒரேநேரத்தில் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டால் தக்காளி கிலோ ரூ.2-க்கு விற்கப்படும் அல்லது ரோட்டில் கொட்டப்படும் நிலையும் ஏற்பட்டது. அதேநேரம் மழையால் உற்பத்தி பாதித்தால் கிலோ விலை ரூ.100-ஐ எட்டும்.

தமிழகத்தில் ஒரு வீட்டுக்கு தினமும் 100 கிராம் தக்காளி தேவைப்படுகிறது என்றால் ஆண்டுக்கு 2.5 லட்சம் மெட்ரிக் டன்தக்காளி தேவைப்படும் என்றுமதிப்பிடப்பட்டுள்ளது.

கோடைகாலம் மற்றும் மழைக்காலத்தில் தக்காளியின் தேவைஅதிகமாக இருக்கும். பொதுமக்கள், விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு தக்காளியின் சீரான உற்பத்திக்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொதுமக்கள் ஆண்டு முழுவதும் தக்காளியைப் பயன்படுத்துகின்றனர். 15-க்கும் மேற்பட்ட தக்காளி ரகங்களில் சிவம் ரகம்அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் மூலம்தக்காளி உற்பத்தியை அதிகரிக்க குழித்தட்டு நாற்றுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1 தக்காளி கன்று 1 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தக்காளி அதிகமாக உற்பத்தியாகும்போது பெங்களூரு, கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. அத்துடன் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் 5 நடமாடும் வாகனங்கள் மூலம் உபரி தக்காளியை சேகரித்து, அதன் தோல், விதையை எடுத்துவிட்டு தக்காளி பழச்சாறு தயாரித்து, பாட்டில்களில் அடைத்து ஓட்டல்களுக்கு விற்கப்படுகிறது. இப்பழச்சாறு இரண்டு மாதங்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

மேலும், தக்காளி வத்தல், சாஸ் போன்றவையும் தயாரித்து விற்கப்படுகின்றன. அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்யும் விவசாயிகள், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள குளிர்பதனக் கிடங்குகள் மற்றும் 20 இடங்களில் உள்ள முதன்மை பதப்படுத்தும் மையங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

அழுகும் பொருளாக இருந்தாலும் தற்போது ஒட்டுரக தக்காளியே அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதால் அந்த தக்காளிபோக்குவரத்தில் தாக்குப்பிடிப்பதுடன், 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமலும் இருக்கிறது என்றார். ஒரேநேரத்தில் பெருமளவு சாகுபடி செய்யப்பட்டால் தக்காளி கிலோ ரூ.2-க்குவிற்கப்படும் அல்லது ரோட்டில் கொட்டப்படும் நிலையும் ஏற்பட்டது. அதேநேரம் மழையால் உற்பத்தி பாதித்தால் கிலோ விலை ரூ.100-ஐ எட்டும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x