கேரளாவின் தென்மலா போன்று கொடைக்கானல், கல்லார், கருமந்துறை, தேவாலா, குற்றாலத்தில் சூழல் சுற்றுலா

கேரளாவின் தென்மலா போன்று கொடைக்கானல், கல்லார், கருமந்துறை, தேவாலா, குற்றாலத்தில் சூழல் சுற்றுலா
Updated on
1 min read

கேரளாவின் தென்மலா சூழல் சுற்றுலா போன்று, தமிழகத்தில் கொடைக்கானல், கல்லார், குற்றாலம், கருமந்துறை, தேவாலா ஆகிய 5 இடங்களில் சூழல் சுற்றுலா (Eco Tourism) அமைக்கப்படுகிறது.

நகரங்களில் பரபரப்பான வாழ்க்கை வாழும் மக்கள் இயற்கையோடு இயைந்த ஒருநாள் வாழ்க்கையை அனுபவிக்கும் வகையில் தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 38 ஏக்கரிலும், கோவை மாவட்டம் கல்லாரில் 23 ஏக்கரிலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5 ஏக்கரிலும், சேலம் மாவட்டம், கருமந்துறையில் ஆயிரம் ஏக்கரிலும், நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 200 ஏக்கரிலும் சூழல் சுற்றுலா அமைக்கப் படுகிறது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சூழல் சுற்றுலா அமைக்கப்படும் 5 இடங்களில் ஏற்கெனவே அடிப்படைக் கட்டமைப்புகள் உள்ளன.அங்கு சுற்றுலா வரும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. குடும்பமாக வருவோர் அமர்ந்து உணவருந்தவும், இளைப்பாறவும் வசதிகள் செய்து கொடுத்தல், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, சாகசப் பயணம் செய்வதற்கான ஏற்பாடு, மரத்தில் வீடுகள், குடில்கள் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறுகின்றன.

அத்துடன், சூழல் சுற்றுலாவைக் கண்டுகளிக்க வரும் மக்கள் தோட்டக்கலைப் பண்ணையில் நடைபெறும் விதை உற்பத்தி, செடிகளுக்கு ஒட்டுக் கட்டுவது, பதியம் போடுதல், ஆண்டு முழுவதும் காய்கறிகள், பழங்கள், மலர் உற்பத்திக்காக அமைக்கப் பட்டுள்ள பசுமைக் குடில்கள், நிழல்வலைக் கூடங்கள் ஆகியவற்றைக் காணலாம். மேலும், வனப்பகுதியில் மா, பலா, வாழை, கொய்யா மரங்களில் பழங்களை பறித்து சாப்பிடவும் அனுமதி உண்டு.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையை அனுபவிக்க வழிவகை செய்யப்படுகிறது. சூழல் சுற்றுலா, மாணவர்களுக்கு சிறப்பான அனுபவத்தைக் கொடுக்கும். பொதுமக்கள் புத்துணர்ச்சி பெறுவர். டீ, காபிக்கு பதிலாக இளநீர் பருகலாம். இயற்கை உணவுகளைச் சாப்பிட உணவகமும் உண்டு. தலா ரூ.50 லட்சம் வீதம் ஐந்து இடங்களில் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் சூழல் சுற்றுலா மேம்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in