

சாலைகளின் மையப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக பேனர்கள், கொடிக்கம்பம் நடுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
சாலைகளின் மையப்பகுதிக ளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்கள் வைக்க தடை விதிக்கக்கோரி கோவையைச் சேர்ந்த கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பின் செயலாளர் கே.கதிர்மதியோன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், சென்னையில் கடந்தாண்டு சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் சரிந்து சுப என்ற மென்பொறியாளர் பலியானார். இதேபோன்ற விபத்து சம்பவங்கள் கோவையிலும் நடந்துள்ளது. சாலைகளின் மையப்பகுதிகளில் விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்கள் வைப்பதால் ஏற்படும் விபத்து அபாயஙகள் குறித்து கடந்த 2011-ம் ஆண்டு எங்களது அமைப்பின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இதுபோல சாலைகளின் நடுவில் பேனர்கள் வைப்பதற்கு தடை விதித்தும், பல்வேறு விதிமுறைகளை வகுத்தும் உத்தரவிட்டது.
ஆனால் அந்த உத்தரவை அதிகாரிகள் மதிப்பதில்லை. இத னால் பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.
எனவே சாலைகளின் நடுவில் பேனர்கள், விளம்பர பலகைகள், கொடிக்கம்பங்கள் வைக்க ஏற்கெனவே உயர் நீதிமன்றம் விதித்துள்ள தடை உத்தரவை அதிகாரிகள் சரியாக கடைபிடிக்க உத்தரவிட வேண்டும்.
இதுதொடர்பாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி யளிக்கும் விதிகளை நீக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் கோரியிருந்தார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக வரும் ஜன.22 அன்று தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.