

பொங்கல் பண்டிகை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறி கள் வரத்து குறைந்து, அவற்றின் விலை நேற்று உயர்ந்து இருந்தது.
தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையோரப் பகுதிகளில் விளையும் காய்கறிகள் அதிக அளவில் சென்னை கோயம்பேடு சந்தைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை கடந்த 4 நாட்களாக விவசாயிகள் கொண்டாடி மகிழ்ந்தனர். அதன் காரணமாக அவர்கள் காய்றிகளை சந்தைக்கு அனுப்புவதை நிறுத்தி இருந்தனர்.
கோயம்பேடு சந்தையிலும் காணும் பொங்கல் தினமான வெள் ளிக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது. இதை முன்னிட்டு கடந்த 15, 16 ஆகிய தேதிகளில் குறைவாகவே காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டன. நேற்று சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைவாகவே இருந்தது. அதனால் அவற்றின் விலை சற்று உயர்ந்திருந்தது. பொங்கலுக்கு பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால், காய்கறி வாங்க குறைவான மக்களே வந்திருந்தனர்.
வரத்து குறைவால் கடந்த வாரம் கிலோ ரூ.20-க்கு விற்கப்பட்ட தக்காளி நேற்று ரூ.25 ஆகவும், வெங்காயம் ரூ.45-லிருந்து ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. மேலும், முள்ளங்கி ரூ.16, பீன்ஸ் ரூ.45, முட்டைக்கோஸ் ரூ.12, கேரட் ரூ.75, பீட்ரூட் ரூ.22, முருங்கைக்காய் ரூ.180 என விலை உயர்ந்து விற்கப்படுகின்றன.
மற்ற காய்கறிகளான சாம்பார் வெங்காயம் ரூ.120, கத்தரிக்காய் ரூ.20, உருளைக்கிழங்கு, அவரைக் காய் தலா ரூ.35, வெண்டைக்காய் ரூ.10, பாகற்காய், புடலங்காய் தலா ரூ.18, பச்சை மிளகாய் ரூ.10 என விற்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக கோயம்பேடு சந்தை காய்கறி மொத்த வியாபாரிகள் கூறும்போது, “சில தினங்களுக்கு காய்கறிகள் வரத்து குறைவாகவே இருக்கும். திங்கள்கிழமை முதல் வழக்கமான காய்கறிகள் வரத் தொடங்கும். அப்போது காய்கறி விலை குறைய வாய்ப்புள்ளது” என்றனர்.