Published : 19 Jan 2020 08:21 AM
Last Updated : 19 Jan 2020 08:21 AM

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே 18-ம் நூற்றாண்டு ‘சதி கற்கள்’ கண்டுபிடிப்பு

உத்திரமேரூர் அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 ‘சதி கற்கள்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உத்திரமேரூர் வட்டம், சாலவாக்கம் கிராமத்தில் இருந்து திருமுக்கூடல் செல்லும் சாலையில் உள்ளது எடமிச்சி கிராமம்.உத்திரமேரூர் வர லாற்று ஆய்வு மையத் தலைவர் சு.பாலாஜி தலைமையில் ‘தமிழர் தொன்மம் குழு’-வின் அமைப்பாளர் வெற்றித்தமிழன் ஆகியோர் இணைந்து கள ஆய்வு செய்தபோது, எடமிச்சி கிராமத்தில் இருந்து 2 சதி கற்களை கண்டுபிடித்துள்ளனர். இவை 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சதி கற்களாக இருக்குமென கருதப்படுகின்றன.

தன் இனக்குழுவை காப்பதற்காக அல்லது தனது ஊரை காப்பதற்காக போரில் வீர மரணம்அடைந்த வீரனோடு, அவனது மனைவி தீ மூட்டி தானும் உயிரை மாய்த்துக் கொள்வது முன்பு வழக்கத்தில் இருந்துள்ளது. இத்தகைய உடன்கட்டை ஏறும் நிகழ்வுக்கு அக்காலத்தில் ‘சதி’ என்று பெயர். வீர மரணத்தை தழுவிய அத்தம்பதியின் நினைவை போற்றும் வகையில், அவர்களது உருவங்களை கல்லில் சிற்பமாக செதுக்கி வைத்து, அவற்றை வணங்கி வழிபடுவது அன்றைய நடைமுறை. இந்தக் கற்களுக்கு ‘சதி கற்கள்' என்று பெயர்.

‘சதி கற்கள்’ குறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் சு.பாலாஜி கூறியதாவது:

எடமிச்சி கிராமத்தில் நாங்கள் கள ஆய்வு செய்தபோது அந்த ஊர் குளக்கரையில் உடைந்த நிலையில் 2 சதி கற்களை கண்டறிந்தோம். 34 செ.மீ உயரமும் 47 செ.மீ அகலமும் கொண்ட ஒரு சதி கல்லில் 8 வரிகள் கொண்ட கல்வெட்டு எழுத்து காணப்படுகிறது. இதில், 1706-ம் ஆண்டில் தனது கணவன் உயிரிழந்தவுடன் செந்தாமள் என்கிற பெண், தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டு உடன்கட்டை ஏறினார் என்ற செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் செந்தாமளின் உருவம் வலது பக்கமாகவும் அவரது கணவரின் உரு வம் இடது பக்கமாகவும் புடைப்பு சிற்பங் களாக உள்ளன.

இன்னொரு சதி கல் 55 செ.மீ உயரம் 78 செ.மீ அகலத்தில் காணப்படுகிறது. இதில் வலது பக்கமாக கணவனின் உருவமும் இடது பக்கமாக மனைவியின் உருவமும் புடைப்பு சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

இதில் கணவனின் தலையில் உள்ள கொண்டை மேல் நோக்கிய நிலையில் ஒரு கயிற்றால் கட்டப்பட்டுள்ளது. காதில் அணிகலன், கழுத்தில் ஆரங்கள், புஜங்களில் வாகு வளையங்கள், மணிக்கட்டில் காப்புடன் வலது கையை மடக்கிய நிலையில், மார்பருகே ஒரு பொருளை ஏந்தியபடியும், இடது கையில் ஒரு வாளை ஏந்தியபடியும் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த சதி கற்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டு, சிற்ப அமைப்பு ஆகியவற்றை கொண்டு இவை 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதமுடிகிறது. இந்த 2 சதி கற்களையும் தொல்லியல் துறை உரிய கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x