Published : 19 Jan 2020 08:17 AM
Last Updated : 19 Jan 2020 08:17 AM

ஜன.20, 22, 23, 26-ம் தேதிகளில் மெரினாவில் போக்குவரத்து மாற்றம்: குடியரசு தின விழாவை முன்னிட்டு ஏற்பாடு

குடியரசு தின விழா மற்றும் ஒத்திகை நிகழ்ச்சியை முன்னிட்டு மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் 20, 22, 23, 26-ம் தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

குடியரசு தின விழா நடைபெறும் ஜன. 26-ம் தேதியும், அதற்கான கலைநிகழ்ச்சி ஒத்திகைகள் நடைபெறும் ஜன. 20, 22, 23-ம் தேதிகளிலும் மெரினா காமராஜர் சாலையில் சாந்தோம் சர்ச் முதல் போர்நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கிச் செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து ஆர்.கே.மடம் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

பிற வாகனங்கள் (மாநகரப் பேருந்துகள் உட்பட) சாந்தோம் நெடுஞ்சாலை மற்றும் கச்சேரி சாலை சந்திப்பில், கச்சேரி சாலை வழியாக திருப்பப்படும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் காந்தி சிலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் நடேசன் சாலை சந்திப்பில் டாக்டர் நடேசன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.

டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ஐஸ் அவுஸ் சந்திப்பை நோக்கி திருப்பி விடப்படும்.

டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கிவரும் வாகனங்கள் பெசன்ட் சாலை ரவுண்டானாவில் ஐஸ் அவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்.

பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் பாரதி சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் பெல்ஸ் ரோடு நோக்கி திருப்பி விடப்படும்.

வாலாஜா சாலை மற்றும் பெல்ஸ் ரோடு சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் (மாநகர பேருந்து தவிர்த்து) பெல்ஸ் ரோடு வழியாக திருப்பி விடப்படும். மாநகரப் பேருந்துகள் கெனால் சாலை சந்திப்பு வரை அனுமதிக்கப்படும்,

அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்படும்.

பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை முன்பாக திருப்பி விடப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x