Published : 19 Jan 2020 08:15 AM
Last Updated : 19 Jan 2020 08:15 AM

இணையதளங்கள் போல ஆபாச செயலிகளுக்கும் விரைவில் தடை: காவல் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை

ஆபாச இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஆபாச வீடியோக்களை பரப்பும்செல்போன் செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவற்றுக்கும் விரைவில் தடை விதிக்கப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உலக அளவில் இந்தியாவில்தான் ஆபாசப் படம் அதிகம் பார்க்கிறார்கள் என மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் புள்ளிவிவரத்துடன் தகவல் வெளியிட்டது. இந்தியாவை பொறுத்தவரை தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

இணையதளங்களில் ஆபாசப் படங்கள் பார்ப்பவர்களின் ஐ.பி.முகவரியுடன் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தை சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் தடை செய்யப்பட்ட இணையதளங்களில் ஆபாசப்படங்கள் பார்த்தது தெரியவந்துள்ளது. அதில் 3 ஆயிரம் பேர் குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் பார்த்தவர்கள்.

மத்திய அரசிடம் இருந்து தமிழக காவல் துறைக்கு இதுதொடர்பான பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. தவிர, குறிப்பிட்ட சில ஆபாச இணையதளங்களுக்கு மத்திய அரசு தடையும் விதித்தது.

இந்நிலையில், ஆபாசப் படங்களுக்கான களமாக இணையதளத்துக்கு பதிலாக, செல்போன் செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இணையதளத்துக்கு இருப்பதுபோன்ற தடைகள், செல்போன் செயலிகளுக்கு இல்லை. நேரடியாக சம்பந்தப்பட்டவரின் செல்போனுக்கே சென்றுவிடும் என்பதால், ஆபாசப் படங்களுக்கான செயலிகளும் அதிக அளவில் உருவாக்கப்பட்டு, அதன்மூலம் பணம் சம்பாதிக்கின்றனர். இந்தியாவில் இந்தி நடிகைகள், மாடல் அழகிகள் சிலர் இதுபோன்ற செயலிகளை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:

ஒருசில படங்களில் மட்டுமே நடித்த இந்தி நடிகை ஒருவர் தனது பெயரில் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தினார். முதலில் தன் புகைப்படங்களை மட்டுமே அதில் பகிர்ந்து வந்தார். அடுத்தகட்டமாக தனது ஆபாச வீடியோவையும் வெளியிட்டார். செயலியில் இதுபோன்ற வீடியோக்களை பார்க்க கட்டணம் செலுத்தவேண்டும் என்பதால், அவருக்கு நல்ல வருமானமும் கிடைத்தது. சுமார் 10 லட்சம் பேர் அந்த நடிகையின் செயலியை பதிவிறக்கம் செய்தனர்.

தொடர்ந்து, பலரும் இதுபோன்றஆபாச செயலிகளை தொடங்க ஆரம்பித்துள்ளனர். ஆபாச இணையதளங்கள்போல, இதுபோன்றஆபாச செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக காவல் துறை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x