

உடல் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை வலியுறுத்தி தமிழகம், கேரளாவில் உள்ள சுற்றுலா மையங்களுக்கு ஓய்வுபெற்ற பிரான்ஸ் ராணுவ வீரர் தனது மனைவியுடன் சைக்கிளில் பயணம் செய்து வருகிறார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் பெடீசியர் கை (70), அந்நாட்டு ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவரது மனைவி அணி (65). பிரான்ஸில் இருந்து சென்னை வந்துள்ள இவர்கள், ஒரே சைக்கிள் (இருவர் பய ணிக்கும் சைக்கிள்) மூலம் தமிழகம், கேரளாவில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
எவ்வளவு தூரம் பயணிக்கிறோம்?
உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழலை வலியுறுத்தி இந்த சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள இவர்கள், தினமும் எவ்வளவு தூரம் பயணிக்கிறோம் என்பதை காட்டும் கருவி மற்றும் நவீன கீர் வசதி உள்ளிட்டவற்றை தங்கள் சைக்கிளில் பொருத்தியுள்ளனர்.
இதுகுறித்து பெடீசியர் கை கூறியதாவது:
இன்று உலகம் முழுவதும் வாகனப் பெருக்கத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. பொதுவாக உலகம் முழுவதும் மக்களின் உடல் உழைப்பும் குறைந்துவிட்டது. பிரான்ஸில் பலர் கார் ஓட்டுவதை நிறுத்திவிட்டு, சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனர். அதனால் எங்கள் நாட்டில் காற்று மாசு குறைந்துள்ளது.
நான் ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த, என் மனைவியுடன் உலகம்முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறேன்.
தமிழகத்தில் 1 மாதம்
ஜெர்மன், இத்தாலி ஆகிய நாடுகளில் 2 மாத பயணத்தை முடித்துவிட்டு, தற்போது இந்தியா வந்துள்ள நாங்கள், தமிழகத்தில் ஒரு மாதமும், கேரளாவில் ஒரு மாதமும் சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளோம்.
ஒரு நாளைக்கு 100 கி.மீ பயணம் மேற்கொள்வது எங்கள் பயணத் திட்டம். இருவரும் சைக்கிள் ஓட்டுவதால் எங்களுக்கு இதுவரை எந்த நோயும்வந்ததில்லை, மருத்துவமனைக்கும் சென்றதில்லை. எங்கள் கடைசி காலம் வரை உலகம் முழுவதும் சைக்கிள் பயணம் செய்து, எங்கள் இறுதி காலத்தை நிறைவு செய்ய உள்ளோம்.
விருந்தோம்பல்
சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் வந்தபோது தமிழர்களின் விருந்தோம்பலை கண்டு நெகிழ்ந்து போனோம் என்றார். இன்று உலகம் முழுவதும் வாகனப் பெருக்கத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸில் பலர் கார் ஓட்டுவதை நிறுத்திவிட்டு, சைக்கிள் பயணம் மேற்கொள்கின்றனர். அதனால் அங்கு காற்று மாசு குறைந்துள்ளது.