

சென்னை மாநகராட்சி சார்பில் காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை முழுவதும் 6 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. 25.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டன என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சியின் செய்திக்குறிப்பு:
“சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது சுகாதாரத்துறை சார்பாக ஜன.17 அன்று காணும் பொங்கலை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரையில் உழைப்பாளி சிலை மற்றும் காந்தி சிலை அருகில், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, பாலவாக்கம் கடற்கரை, கிண்டி சிறுவர்கள் பூங்கா மற்றும் திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5க்கு உட்பட்ட சகாய மாதா பள்ளி என மொத்தம் 6 இடங்களில் முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ள சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 120 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியாற்றினர். இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்களில் 1,128 பயனாளிகள் பயனடைந்தனர். மேலும், காணும் பொங்கலை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட மெரினா கடற்கரையில் 120 துப்புரவுப் பணியாளர்கள், ஒரு காம்பேக்டர் வாகனம் மற்றும் கடற்கரை மணலைச் சுத்தம் செய்யும் 6 இயந்திரங்கள் மூலம் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன.
அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 40 துப்புரவுப் பணியாளர்கள் மூலம் 10 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டன. மேலும், மேற்கண்ட கடற்கரைகளில் துப்புரவுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன”.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.