Last Updated : 18 Jan, 2020 05:19 PM

 

Published : 18 Jan 2020 05:19 PM
Last Updated : 18 Jan 2020 05:19 PM

தொன்மை வாய்ந்த தமிழ் சமூகத்தின் கலாச்சாரம் வியக்க வைக்கிறது: ஹூஸ்டன் பல்கலைக்கழக முதல்வர் டில்லீஸ் டீ ஆண்டோனியோ

"2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் கலாச்சாரமும் பண்பாடும் மிகவும் வியக்க வைக்கிறது. அதனை அறிந்து கொள்வதில் எனக்கு மிகவும் பெருமை" என்று அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழக முதல்வர் டில்லீஸ் டீ ஆண்டோனியோ பேட்டி அளித்துள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம் தமிழ் இருக்கை ஒன்றை தொடங்க இருக்கிறது. அதற்குரிய ஏற்பாடுகளில் தீவிரமாக இயங்கிவரும் பல்கலைக்கழகத்தின் முதல்வர் டில்லீஸ் டீ ஆண்டோனியோ, தமிழகத்திற்கு 4 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்துள்ளார்.

முன்னதாக நேற்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட்ட அவர் இன்று மதுரையில் திருமலை நாயக்கர் மஹால், உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள கீழடி அகழாய்வு பொருட்கள் கண்காட்சியகம் ஆகியனவற்றைப் பார்வையிட்ட பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழாய்வு களத்திற்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், "2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்த தமிழ் சமூகத்தின் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தின் மீது நடந்து செல்வதை நான் பெருமையாக கருதுகிறேன்.

அவர்களது கலாச்சாரமும் பண்பாடும் என்னை வியக்க வைக்கிறது. தற்போது தமிழகத்தில் நான் காணுகின்ற அனைத்து விஷயங்களையும் எனது மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் தெரியப்படுத்துவேன்.

தமிழகத்தில் நான் மேற் கொண்டிருக்கின்ற பயணம் தனிப்பட்ட முறையில் எனது அறிவை விரிவு செய்வதற்கு ஒரு பெரிய பயனுள்ளதாக இருக்கிறது என்றார்.

மேலும் அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் அமைய உள்ள தமிழ் இருக்கை குறித்து அவர் பேசும்போது, தமிழ் மொழியின் தொன்மை, தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் உலகிலுள்ள அனைவரும் தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக எங்களது பல்கலைக்கழகத்தில் தனி இருக்கை தற்போது கொண்டு வருகிறோம் என்றார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குறித்து அவரிடம் கேட்டபோது, நேற்று நேரடியாக சென்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை கண்டு களித்தேன் அந்த இளைஞர்களின் வீரமும் விவேகமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

இது போன்ற தமிழர்களின் கலாச்சார பெருமையை எனது பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியது அவசியம் என்று உணர்கிறேன் என்றார்.

கீழடி அகழாய்வு பொருட்கள் அருங்காட்சியகம் குறித்து அவரிடம் கேட்டபோது, இதுபோன்ற தொன்மை வாய்ந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கண்காட்சிகளை நான் முதன்முதலாக பார்வையிடுகிறார் அங்கிருந்த பானை ஓடுகள் பண்டைக் காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் வியப்பை ஏற்படுத்தின. இவையெல்லாம் நான் கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது தொல்லியல் மற்றும் மனிதவியல் சார்ந்த அறிவுத்திறன் மேம்படுவதற்கு இதுபோன்ற அருங்காட்சியகம் அகழாய்வு களங்களும் நல்ல வாய்ப்பு என்றே கருதுகிறேன் என்றார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் பேராசிரியர் முனைவர் சத்தியமூர்த்தி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர் முனைவர் கரு முருகேசன், தொல்லியல் துறையின் மதுரை காப்பாட்சியர் ஆசைத்தம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் முன்னிலையில் நடைபெற உள்ளது அதற்குரிய ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருவதால் அதுகுறித்த அறிவதற்கும் தமிழரின் தொன்மை மரபு ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்கும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் முதல்வர் டாக்டர். டில்லிஸ் டீ ஆன்டோனியோ மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு தொன்மை வாய்ந்த இடங்களுக்கு சென்று பார்வையிடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x