

புதுமையான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு வேளாண் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட முன்னாள் உதவி பொதுச்செயலாளர் மற்றும் இயக்குநர் பெட்ரோ மெட்ரானோ ரோஜாஸ் தெரிவித்தார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக 36-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக இணை வேந்தரும் வேளாண்துறை அமைச்சருமான ஆர்.வைத்திலிங்கம் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் 33 மாணவர்களுக்கு தங்கப்பதக்கமும், 111 மாணவர் களுக்கு முனைவர் பட்டமும், 199 மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டமும், 827 மாணவர்களுக்கு இளநிலைப் பட்டங்களும் வழங் கப்பட்டன. பட்டங்களை அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கினார்.
அமெரிக்க கார்னல் பல்கலைக் கழக பயிர் வளர்ப்பு மற்றும் மரபியல் துறை பேராசிரியர் சூசன் ஆர்.மெக்கோச், அமெரிக்காவை சேர்ந்த உலக உணவுத் திட்ட முன்னாள் ஐ.நா. உதவி பொதுச் செயலாளர் மற்றும் இயக்குநர் பெட்ரோ மெட்ரானோ ரோஜாஸ், கோவை கே.ஜி.ஐ.எஸ்.எல். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அசோக் பக்தவத்சலம் ஆகியோருக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்கப் பட்டது.
நிகழ்ச்சியில், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கு. ராமசாமி பேசும்போது, ‘இறவை விவசாயத்தில் இருந்து மானாவாரி விவசாயத்தை நோக்கி வேளாண் ஆராய்ச்சி முடுக்கிவிடப்பட்டுள் ளது. 32 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட போதும் 2011-12-ம் ஆண்டு 103 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானி யம் உற்பத்தி செய்து தமிழகம் சாதனை படைத்தது. தொடர்ந்து 2012-13-ல் 112 லட்சம் மெட்ரிக் டன், 2013-14-ல் 128 லட்சம் மெட்ரிக் டன் விளைவித்து கடந்த 26 ஆண்டு களில் இல்லாத அளவு வளர்ச்சியை வேளாண்துறை எட்டியுள்ளது’ என்றார்.
பெட்ரோ மெட்ரானோ ரோஜாஸ் பேசும்போது, ‘காந்தியடி களின் வார்த்தைகள் எனக்கு மிகவும் ஊக்கம் அளிப்பவை. ‘பசித்தவ ருக்கு உணவுதான் கடவுள்’ என்ற அவரின் வார்த்தையை உணர்ந்து பசியாற்றத்தான் பாடுபட்டுள்ளேன். பட்டம் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் புதுமையான ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்றார்.
நிகழ்ச்சியின்போது, முதுமுனை வர் பட்டப்படிப்புக்கான விருது அப்துல்கலாம் பெயரிலும், வினய் ராய் விருது, ருக்மணி சின்னம்மாள் விருது, சி.வி.சிவக்குமார் விருது ஆகியவை புதிதாக அறிவிக்கப் பட்டன.