

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயல் மஞ்சுவிரட்டில் சீறிப் பாய்ந்த காளை, சிறுவன் மற்றும் குழந்தையுடன் வரும் பெண்ணைத் தாவிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் 320 இடங்களில் மஞ்சுவிரட்டு நடக்கிறது. மஞ்சுவிரட்டு ஜல்லிக்கட்டு போன்று அல்லாமல் கண்மாய் பொட்டல், வயல்வெளிகளில் ஆங்காங்கே அவிழ்த்து விடப்படும். மஞ்சுவிரட்டிற்கு அழைத்து வரும் மாடுகளுக்கு, கிராம மக்கள் சார்பில் துண்டு, வேட்டி அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.
அணிவிக்கப்படும் துண்டு, வேட்டியை மாடுகளின் உரிமையாளர்கள் அவிழ்க்கமாட்டார்கள். மாடுகளின் கழுத்தில் சலங்கை மணியும் கட்டப்பட்டிருக்கும். மாடுகளை அவிழ்த்துவிட்டதும், அவற்றைப் பிடிக்கும் வீரர்கள் துண்டு, வேட்டியை அவிழ்த்துக் கொள்வார்கள். சிலர் சலங்கையையும் அவிழ்த்துக் கொள்வர். மாட்டின் உரிமையாளர்கள் பணத்தைச் செலுத்தி சலங்கையை மீட்டுச் செல்வர்.
இதில் மாடுபிடி வீரர்கள் மட்டுமின்றி, மற்ற ஆண்களும் மாடு பிடிக்க ஆர்வம் காட்டுவார்கள். அரசின் கட்டுப்பாடுகளால் தொழுவத்தில் இருந்து சில மாடுகளை அவிழ்த்துவிட்டாலும், பெரும்பாலான மாடுகள் இன்னும் பொட்டலில் அவிழ்த்துவிடும் வழக்கம் இருந்து வருகிறது.
அந்தவகையில் நேற்று திருப்பத்தூர் அருகே சிராவயலில் நடந்த மஞ்சுவிரட்டில் 101 மாடுகள் தொழுவத்தில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. ஆனால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் பொட்டலில் அவிழ்த்து விடப்பட்டன. அதனைப் பல்லாயிரக் கணக்கானோர் வாகனங்களில் நின்றபடி கண்டு ரசித்தனர்.
அதில் ஒரு காளையை பொட்டலில் அவிழ்த்துவிட்டதும் சீறிப் பாய்ந்து ஆவேசத்துடன் சென்றது. எதிரே சிறுவர், கைக்குழந்தையுடன் ஒரு இளம்பெண் வந்தார். காளையைப் பார்த்த அவர்கள் அப்படியே குனிந்துவிட, அவர்களை முட்டாமல் தாவிச் சென்றது அந்தக் காளை.
இதை வீடியோ எடுத்த பார்வையாளர் ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகி வருவதுடன், அந்த காளைக்குப் பாராட்டும் குவிந்து வருகிறது. காளை வந்ததும் சாதுர்யமாகக் கீழே குனிந்து குழந்தைகளைக் காப்பாற்றிய தாய்க்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.