Last Updated : 18 Jan, 2020 04:32 PM

 

Published : 18 Jan 2020 04:32 PM
Last Updated : 18 Jan 2020 04:32 PM

கொரானோ வைரஸ் கண்காணிப்பு தீவிரம்; மக்கள் பீதியடைய வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சீனாவில் கொரானோ வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தொடர்ந்து தமிழகத்தில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்துகொண்ட பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

போலியோ இல்லாத மாநிலமாகத் தொடர்ந்து 16 ஆண்டுகளாக தமிழகம் விளங்கி வருகிறது. இதற்கு முன் ஆண்டுக்கு 2 முறை குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வந்தது. போலியோ பாதிப்பு ஒழிக்கப்பட்டுள்ளதால் தற்போது ஆண்டுக்கு ஒரு தடவை மட்டுமே கொடுக்க உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத் துறை முடிவெடுத்துள்ளது.

நிகழாண்டு திட்டமிட்டபடி நாளை (இன்று) நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும். தமிழகத்தில் 5 வயதுக்கு உட்பட்ட 70.50 லட்சம் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட உள்ளது.

சீனாவில் தற்போது கொரானோ எனும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில், வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் தீவிர பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுவாகவே, தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருவதால் நிப்பா வைரஸ், எபோலோ வைரஸ் போன்ற காய்ச்சல் பாதிப்புகள் இதற்கு முன்பு வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் வந்தபோதிலும்கூட தமிழகத்தில் அத்தகைய பாதிப்பு இல்லை.

கொரானோ வைரஸ் காய்ச்சல் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x