

பழநி மலைக்கோவில் நவபாஷாண சிலையின் பீடத்திற்கு வருகிற திங்கள்கிழமை மருந்துசாத்தும் நிகழ்ச்சி நடைபெறுவதால் காலை 6.30 மணி முதல் 10.30மணி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று பழனி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் மூலவர் சிலையாக நவபாஷாண சிலை உள்ளது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையே மூலவர் சிலையாகும்.
பழனி கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்றது. ஆகமவிதிப்படி பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இதன்படி கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும்.
இந்நிலையில் கோயில் கும்பிபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு கடந்த மாதம் பாலாலயம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து கோயில் திருப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பழநி மலைக் கோவிலில் மூலவர் சிலை வைக்கப்பட்டிருக்கும் பீடத்திற்கு அஷ்டபந்தனம் என்ற மருந்து சாத்துதல் நிகழ்ச்சி வருகிற 20-ம் தேதி திங்கள் கிழமை நடைபெறவுள்ளதாக பழனி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதன்படி திங்கள்கிழமை காலை 5.30 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு காலை 6.30 மணிக்குள் விஸ்வரூப தரிசனம், விழா பூஜை, சிறுகாலசந்தி பூஜை மற்றும் காலசந்தி பூஜை ஆகியன நடத்தி முடிக்கப்பட்டு தொடர்ந்து அஷ்டபந்தனம் என்ற மருந்துசாத்துதல் நிகழ்ச்சி நடைபெறும் என்றும், எனவே காலை 6.30மணி முதல் காலை10.30மணி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே பக்தர்கள் வருகிற திங்கட்கிழமை அன்று அதிகாலை தரிசனம் செய்ய பக்தர்கள் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.