

டாஸ்மாக் விற்பனை மூலம் கடந்த ஆண்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.36,752 கோடி கிடைத்துள்ளதாக தமிழ்நாடு வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இந்த பதில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கொள்முதல் செலவு ரூ.19,294.07 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு கொள்முதல் செலவு, பணியாளர்கள் ஊதியம் ரூ.420.70 கோடி போக ரூ.17,037.62 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. இதனால், மது ஆலைகளே அதிகம் லாபமடையும் விஷயம் அம்பலமாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் 6,826 டாஸ்மாக் கடைகள் இருந்தன. இந்தக் கடைகளில் 7000 மேற்பார்வையாளர்கள், 17 ஆயிரம் விற்பனையாளர்கள், 4 ஆயிரம் உதவி விற்பனையாளர்கள் உட்பட 28 ஆயிரம் பேர் பணிபுரிந்தனர்.
நீதிமன்ற உத்தரவு, பொதுமக்கள் போராட்டத்தால் பல மாவட்டங்களில் பள்ளிகள், குடியிருப்பகள், கோயில்கள் மற்றும் முக்கிய சாலைகள் அருகே செயல்பட்ட கடைகள் மூடப்பட்டதால் தற்போது 5,192 கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்தக் கடைகளுக்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், தனியார் மது ஆலைகளில் இருந்து மதுபாட்டில்களை கொள்முதல் செய்து, விநியோகம் செய்கிறது. இதனால், மது விற்பனையில் பெரும் லாபம், அரசை விட மது ஆலைகளுக்கே சென்றுவிடுகிறது.
மது விற்பனையால் ஆண்டுதோறும் உயிர்ப் பலிகள் அதிகரிப்பதால் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பலர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், கடைகள் குறைக்கப்பட்டாலும் ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடந்தபோது தேர்தல் நடந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஆனால், அதே டாஸ்மாக் கடைகள் அருகே உள்ள கட்டிடங்கள், மறைவுப் பகுதிகளில் போலி மதுபாட்டில்களும், டாஸ்மாக் மது பாட்டில்களும் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டன. அதனைத் தடுக்க வேண்டிய போலீஸார், கண்டும் காணாமல் இருந்துவிட்டனர்.
இந்நிலையில் கடந்த 2018-2019ம் ஆண்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் விற்பனை விவரத்தை மதுரை பை-பாஸ் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த எஸ்.முனியாண்டி என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெற்றுள்ளார்.
அதில், கடந்த 2018-2019ம் ஆண்டில் ரூ.36,752.39 கோடிக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதுகுறித்து எஸ்.முனியாண்டி கூறுகையில், ‘‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திடம் தமிழகத்திற்கு தேவையான மது வகைகள், அரசின் டாஸ்மாக் கடைகளுக்கு எந்தெந்த மதுபான ஆலைகளில் இருந்து வாங்கப்படுகிறது என்ற விவரத்தை கேட்டிருந்தேன்.
அதற்கு சென்னை, கோவை, காஞ்சிபுரம், புதுகோட்டை, திருவள்ளூர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 19 தனியார் மது ஆலைகளில் இருந்து மதுபாட்டில்கள் வாங்குவதாக தகவல் தெரிவித்து இருந்தனர்.
2018-2019ம் ஆண்டில் டாஸ்மாக் கடைகளுக்கு வாங்கப்பட்ட மதுபான ஆலைகளுக்கு வழங்கிய பணத்தின் மதிப்பு எவ்வளவு என்ற கேள்விக்கு, அந்த ஆண்டில் மட்டும் ரூ.19,294.07 கோடி கொள்முதல் செய்த வகையில் அந்த மதுபான ஆலைகளுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
2018-2019ம் நிதியாண்டில் டாஸ்மாக் கடைகள் மூலம் கிடைத்த வருமானம் எவ்வளவு என்ற கேள்விக்கு, ரூ.36,752.39 கோடி டாஸ்மாக் கடைகள் மூலம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
மது ஆலைகளுக்கு கொடுத்ததுபோக அரசுக்கு மதுபாட்டில்களை விற்ற வகையில் பணியாளர்கள் ஊதியம் ரூ.420.70 கோடி போக ரூ.17,037.62 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், இந்த வருவாய்க்கு அரசு சரியாக கணக்கு காட்டுவதில்லை.
அந்த கணக்கு விவரங்களை அரசு வெளிப்படையாக காட்ட வேண்டும். டாஸ்மாக் மது விற்பனையால் அரசை விட தனியார் மது ஆலைகளுக்கே அதிக வருவாய் கிடைக்கிறது’’ என்றார்.