Published : 18 Jan 2020 01:53 PM
Last Updated : 18 Jan 2020 01:53 PM

சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதற்குப் பின்னரும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும்; ஸ்டாலினைச் சந்தித்த பின் கே.எஸ்.அழகிரி பேட்டி

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்தவிதக் கருத்து வேறுபாடும் இல்லை. விரிசலும் இல்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை திமுகவினரை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து இரு கட்சிப் பிரமுகர்களும் முன்வைத்த கருத்துகளால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் என்ற செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், அண்மையில் டெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்த பின்னர் பேசிய கே.எஸ்.அழகிரி, திமுகவும் காங்கிரஸும் இணைந்தே பயணிக்கும் கட்சிகள் என்று கூறியிருந்தார். அதன் நீட்சியாக டெல்லி மேலிட வலியுறுத்தலின் பேரிலேயே திமுக - காங்கிரஸ் விரிசல் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தச் சந்திப்பு நடந்துள்ளதாகத் தெரிகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவர் ராமசாமி, முன்னாள் தலைவர் தங்கபாலு ஆகியோர் சென்றனர்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, "திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இரு கட்சிகளுக்கும் இடையே அவ்வப்போது ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லலாம். ஆனால், சர்ச்சைகள் வராது.

பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாகப் பேசினோம். இனி ஏதும் கருத்து வேறுபாடு வந்தால் அதை நானும் ஸ்டாலினும் பேசித் தீர்த்துக் கொள்வோம். மற்றவர்கள் பேசத் தேவையில்லை. எல்லா விஷயங்களுக்கும் தலையாட்டினால் சிறந்த நண்பராக இருக்க முடியாது. அதனால் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து செல்லும்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதற்குப் பின்னரும் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும். திமுகவும் காங்கிரஸும் சிறந்த நட்புடன் உள்ள கட்சிகள்" என்றார்.

துரைமுருகனின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, ''கூட்டணி தொடர்பாக தனிப்பட்ட கருத்துகளை சிலர் தெரிவித்திருப்பர். ஆரோக்கியமான விவாதங்கள் எப்போதுமே ஏற்புடையவை'' என்று கூறினார்.

எந்தக் கட்சிக்கும் செல்வாக்கு இல்லை..

தேர்தலை தனித்து எதிர்கொள்ள காங்கிரஸ் தயங்குகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த கே.எஸ்.அழகிரி, "இந்தியாவில் தேர்தலை தனித்து எதிர்கொள்ள எந்த ஒரு கட்சிக்கும் செல்வாக்கு இல்லை" என்றார்.

ரஜினி, கமலுக்கு குட்டு..

துக்ளக் விழாவில் ரஜினியின் பேச்சு தொடர்பாக, "ரஜினி முரசொலியையும் துக்ளக்கையும் ஒப்பிட்டுப் பேசியது தவறு. அவர் சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனத்தைப் பேசுபவர். அன்று விழாவில் சொந்தமாகப் பேசியதால் தவறாகப் பேசியிருக்கலாம்" என்று கூறினார்.

''கமல்ஹாசன் தன்னை மதச் சார்பற்றவர் என்று அடையாளப்படுத்துகிறார். ஆனால், கமல்ஹாசன் ரஜினிகாந்த் மூலமாக பாஜகவுக்குத் தூது விடுகிறாரோ என்றே தோன்றுகிறது'' என கே.எஸ்.அழகிரி விமர்சித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x