Published : 18 Jan 2020 12:00 PM
Last Updated : 18 Jan 2020 12:00 PM

கூட்டணியில் விரிசல் இல்லை; ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் தலைவர்கள் பாடுபடுவார்கள்: புதுச்சேரி முதல்வர் நாராயாணசாமி பேட்டி

"திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாகத்தான் இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலிலும் கூட்டணி தொடரும். ஸ்டாலின் முதல்வராவார்" என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை புதுச்சேரி முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நாராயணசாமி சந்தித்தார். இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நாராயணசாமி, "திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து சொல்லவே வந்தேன். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திமுக தொண்டர்களுக்கும் எனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

அதேபோல் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுகவின் பணபலம், அதிகார பலம், அதிகார துஷ்பிரயோகம், தேர்தல் அதிகாரிகளையே மிரட்டும் போக்கு ஆகியனவற்றை முறியடித்து திமுக - காங்கிரஸ் கூட்டணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அந்த வெற்றிக்கு வித்திட்டவர் ஸ்டாலின்தான். அந்தப் பெருமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையே சாரும். அதற்காகவும் வாழ்த்து தெரிவித்தேன்.

நான் முன்பு சென்னை வரும்போதெல்லாம் முத்தமிழ் வித்தகர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெறுவேன். இப்போது திமுக தலைவர் என்ற முறையில் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து சொல்லியிருக்கிறேன். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் என்று யார் சொன்னது? தமிழகம், புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பலமாகவே இருக்கிறது. இந்தக் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் இணைந்திருந்ததைப் போல் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடரும்.

குடும்பமோ, கூட்டணியோ சிறுசிறு சலசலப்பு வரத்தான் செய்யும். ஆனால் அதைப் பேசி சரிசெய்து கொள்ளலாம். உங்களைப் போன்றோர் (ஊடகங்கள்) இந்தக் கூட்டணியை உடைக்க நினைத்தாலும் உடைக்க முடியாது. இது வலுவான கூட்டணி.

நீங்கள் மட்டும் அமைதியாக இருந்தாலே இப்பிரச்சினை தானாக சரியாகிவிடும். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக்க காங்கிரஸ் தலைவர்கள் பாடுபடுவார்கள்.

கார்த்தி சிதம்பரம், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் போன்றோரின் கருத்து தனிப்பட்ட கருத்து. உள்ளாட்சித் தேர்தலில் சீட் பெறுவதில் திமுக - காங்கிரஸ் இடையே போட்டி நிலவியதாகச் சொல்கிறீர்கள். உள்ளாட்சித் தேர்தல் என்பது ஒரு கிராம அளவில் நடைபெறுவது. அங்கு ஊர் பிரச்சினைகளைப் பொருத்து சீட் வழங்கப்படும். அது சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்காது" என்றார் நாராயணசாமி.

கே.எஸ்.அழகிரியும் வருகிறார்..

திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்திக்க தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் வரவிருக்கிறார். அவரின் அறிக்கையே இத்தனை சர்ச்சைக்கும் காரணம் என்பதால் சமரச முயற்சியாக நாராயணசாமி முதலில் ஸ்டாலினைச் சந்தித்துவிட்டு பின்னர் கே.எஸ்.அழகிரி - ஸ்டாலின் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரம் கூறுகிறது.

மேலும், காங்கிரஸின் டெல்லி தலைமை, தமிழகத்தில் திமுகவுடனான கூட்டணி நீடிக்க வேண்டும் என்றே விரும்புகிறது என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x