சுவாமிக்குரிய பிரசாதம் சுகாதாரமாக தயாரிக்கப்படுவதால் நெல்லையப்பர் கோயிலுக்கு முதல்முறையாக மத்திய அரசின் தரச்சான்று
சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதம் சுகாதாரமாக தயாரிக்கப்படுவதால் தமிழகத்தில் முதல்முறையாக திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலுக்கு டெல்லியிலுள்ள மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தரச்சான்று (BHOG) வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள சிறிய மற்றும் பெரிய உணவு உற்பத்தி நிறுவனங்களில் ஆய்வுசெய்து, அவை தயாரிக்கும் உணவு பொருட்களுக்கு எப்எஸ்எஸ்ஏஐ அமைப்பானது சான்று வழங்கி வருகிறது. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள், தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதங்களும் தரமானதாக தயாரிக்கப்படுவதை உறுதி செய்து ஹாக் (BHOG - Blissful Hygienic Offering to God) என்ற சான்றிதழையும் எப்எஸ்எஸ்ஏஐ வழங்குகிறது.
இதையடுத்து திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் மற்றும் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதம் சுகாதாரமாக தயாரிக்கப்படுவதை உறுதி செய்து, சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்காக பல்வேறு கட்டங்களாக கோயில்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
அலுவலர்கள் ஆய்வு
கடந்த 2-ம் தேதி இக்கோயில்களில் சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதம், தண்ணீர் ஆகியவற்றின் மாதிரிகள் தனியார் மூலம் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த 7, 8-ம் தேதிகளில் எப்எஸ்எஸ்ஏஐ சார்பில் அலுவலர்கள் இந்த கோயில்களில் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில் தமிழகத்தில் முதல்முறையாக திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு, சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதமும் சுகாதாரமாக தயாரிக்கப்படுவதால் எப்எஸ்எஸ்ஏஐ-ன் தலைமை செயல் அலுவலர் BHOG சான்று வழங்கியுள்ளார்.
