

கரூர் மாவட்டம் ராச்சாண்டார் திருமலை, திருச்சி மாவட்டம் ஆவாரங்காடு, புதுக்கோட்டை மாவட்டம் வன்னியன்விடுதி ஆகிய இடங்களில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சுமார் 2 ஆயிரம் காளைகள் பங்கேற்றன. ஆவாரங்காட்டில் காளை மிதித்து காளை உரிமையாளர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் தோகைமலையை அடுத்த ராச்சாண்டார் திருமலையில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டை ஆட்சியர் த.அன்பழகன் தொடங்கி வைத்தார். இதில், 805 காளைகள் பங்கேற்றன. காளைகளைப் பிடிக்க 365 வீரர்கள் களமிறங்கினர். இதில் 16 காளைகளை அடக்கிய மணப்பாறையைச் சேர்ந்த கொத்தனார் மரிய ஆனந்த்-க்கு முதல் பரிசாக ப்ரிட்ஜ் வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 14 வீரர்கள் உள்ளிட்ட 45 பேர் காயமடைந்தனர்.
சிறந்த மாடுபிடி வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு 20 தங்க நாணயங்களை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரிசாக வழங்கினார்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகேயுள்ள பாலக்குறிச்சி கிராமம் ஆவாரங்காடு பொன்னர் சங்கர் திடலில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 592 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 289 வீரர்கள் களமிறங்கினர்.
காளைகள் முட்டியதில் வீரர்கள் 17 பேர், காளைகளின் உரிமையாளர்கள் 10 பேர், பார்வையாளர்கள் 14 பேர் என 43 பேருக்கு காயம் ஏற்பட்டது.
காளை உரிமையாளர் மரணம்
இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற தனது காளையை பிடித்துக் கொண்டு, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே ராஜகிரி சுக்கம்பட்டியைச் சேர்ந்த பழனியாண்டி(55) என்பவர் மைதானத்தின் வெளிப் பகுதியிலுள்ள கலெக்ஷன் பாய்ண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த மற்றொரு காளைக்கு பயந்து பழனியாண்டி கீழே படுத்தபோது, அவரது கழுத்தில் அந்தக் காளை மிதித்துச் சென்றது. இதில் படுகாயமடைந்த அவர், மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, புதுக்கோட்டை மாவட்டம் அரையப்பட்டி ஊராட்சி வன்னியன்விடுதியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி தொடங்கி வைத்தார். இதில் 654 காளைகள் பங்கேற்றன. காளைகளை பிடிப்பதற்கு 200 வீரர்கள் களமிறங்கினர். காளைகள் முட்டியதில் 29 பேர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக, வாடிவாசலில் அமைக்கப்பட்டிருந்த மேடை எதிர்பாராதவிதமாக சரிந்ததில், வடகாடு காவல் ஆய்வாளர் பரத் ஸ்ரீனிவாஸ் உட்பட சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.