ஓடிபி எண்ணை தெரிந்துகொண்டு மோசடி; செல்போன் செயலி மூலம் நூதன கொள்ளை: கவனமாக இருக்க மக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை

ஓடிபி எண்ணை தெரிந்துகொண்டு மோசடி; செல்போன் செயலி மூலம் நூதன கொள்ளை: கவனமாக இருக்க மக்களுக்கு போலீஸார் எச்சரிக்கை
Updated on
1 min read

ஒரே ஒரு ஓடிபி எண் உதவியுடன் செல்போனை ஹேக் செய்து, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடும் நூதன மோசடிகள் அரங்கேறுவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு போலீஸார் எச்சரிக்கின்றனர்.

வங்கியில் இருந்து பேசுவதாக கூறி டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களை கேட்டு, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் சம்பவங்கள் அதிகமாக நடந்து வந்தன. பொதுமக்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதில், அதுபோன்ற மோசடி சம்பவங்கள் குறைந்துள்ளன.

இந்த நிலையில், ‘ஓடிபி’ (ரகசிய குறியீட்டு எண்) மூலம் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டும் நூதன முறையை கொள்ளையர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் கூறியதாவது:

சென்னையை சேர்ந்தவர் குமரேசன். இவரது செல்போனுக்கு சமீபத்தில் ஒரு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வந்தது. “நீங்கள் பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும் ‘பேடிஎம்’ கணக்கில் கேஒய்சி (அடையாள சான்று ஆவணங்கள்) முறையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை. அதனால், உங்கள் பேடிஎம் கணக்கு இன்னும் 3 நாட்களில் செயலிழந்துவிடும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இத்தகவல் வந்த அரை மணி நேரம் கழித்து, குமரேசனின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பேடிஎம் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக ஒரு நபர் பேசினார். ‘‘கேஒய்சி ஆவணங்களை கொடுக்க நீங்கள் வீணாக அலைய வேண்டாம். நான் கூறும் வழிமுறைகளின்படி, செல்போன் மூலமாகவே அவற்றை தாக்கல் செய்யலாம்’’ என்று அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியபடி, ‘ஸ்மார்ட்டர்’ என்ற செயலியை (App) குமரேசன் தன் செல்போனில் பதிவிறக்கம் செய்தார். உடனே, அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வந்தது. அந்த ஓடிபி எண்ணை தெரிவிக்குமாறு அந்த நபர் கூற, குமரேசனும் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் குமரேசனின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.15 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது.

‘ஸ்மார்ட்டர்’ என்பது, நம் செல்போனில் உள்ள தகவல்கள் மற்றும் செயல்பாடுகளை மற்றொரு நபர் கண்காணிக்க ஒப்புதல் கொடுக்கும் ஒரு ‘ஹேக்கர்’ செயலி ஆகும். இதை நம் செல்போனில் பதிவிறக்கம் செய்ததும் வரும் ஓடிபி எண்தான், அவ்வாறு ஒப்புதல் தருவதற்கான அனுமதிச் சீட்டு போன்றது.

கன்னியாகுமரியில் இருக்கும் ஒருவரது கம்ப்யூட்டரில் பழுது ஏற்பட்டால், சென்னையில் இருந்தபடியே பொறியாளர் அதை தன் கட்டுக்குள் கொண்டுவந்து, பழுதை சரிசெய்வார்.

இதற்காக உருவாக்கப்பட்டதுதான் ஹேக்கிங் தொழில்நுட்பங்கள். ஆனால், அந்த தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி, அடுத்தவரின் செல்போனை ஹேக் செய்து, தகவல்களை திருடி பணம் கொள்ளையடிக்கும் மோசடிகள் தற்போது நடக்கின்றன.

எனவே, நமக்கு தெரியாத, தேவையற்ற செயலியை யார் பதிவிறக்கம் செய்யச் சொன்னாலும் அதை தவிர்ப்பது நல்லது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in