

சொட்டுநீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்தியதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. சொட்டுநீர் பாசனத்தால் தரமான விளைபொருள் கிடைப்பதால், விவசாயிகளுக்கு விளைச்சலுடன், வருமானமும் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட ஆறுகள் இருந்தாலும் பெரும்பாலான ஏக்கர் நிலங்கள் திறந்தவெளி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மூலமாகவே பாசன வசதி பெறுகின்றன. போதிய மழைப்பொழிவு இல்லாதது, அதிக வெயில் உள்ளிட்ட காரணங்களால் நீர் ஆதாரங்களின் அளவு குறைந்து வருகிறது.
இதனால், தண்ணீர் சிக்கனம் அவசியமாகி வருகிறது. எனவே, சொட்டுநீர் பாசனத்துக்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. விவசாயிகளுக்கு அதற்கான உதவிகள், மானியம் வழங்கப்படுகின்றன.
5 ஏக்கர் வரை வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. சிறு, குறு விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனத்துக்காக ஆழ்குழாய் கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், குழாய்களுக்கு ரூ.10 ஆயிரம், தொட்டிகள் அமைக்க ரூ.40 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. நெல், கரும்பு, வாழை, தென்னை, காய்கறிகள், மலர்கள் சாகுபடிக்கு அதிக அளவில் சொட்டு நீர்ப் பாசனம் பயன்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து வேளாண் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:
சொட்டுநீர் பாசனத்துக்காக 2019-20 ஆண்டில் மத்திய, மாநில அரசுகள் ரூ.1,370 கோடி ஒதுக்கின. இதில், இதுவரை ரூ.758 கோடியில் 1.58 லட்சம் ஹெக்டேரில் சொட்டுநீர் பாசன வசதி செய்து தரப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்தியதில், நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. அடுத்ததாக, கர்நாடகாவில் 1.25 லட்சம் ஹெக்டேர், குஜராத்தில் 77,858 ஹெக்டேர், ஆந்திராவில் 52,027 ஹெக்டேரில் சொட்டுநீர் பாசன வசதி செய்து தரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை சொட்டுநீர் பாசனத்தால் 60 சதவீதம் தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதத்துக்குள் மேலும் 1 லட்சம் ஹெக்டேரில் சொட்டுநீர் பாசன வசதி செய்து தரப்படும்.
கடந்த சில ஆண்டுகளாக போதிய மழைப் பொழிவு இல்லை. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துவிட்டது. இருப்பினும் சொட்டுநீர் பாசனம் மூலம் சாகுபடி பரப்பு 40 சதவீதமும் விவசாய விளைபொருள் உற்பத்தி திறன் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
தவிர, விளைபொருளின் தரமும் அதிகரிக்கிறது. உதாரணத்துக்கு, சொட்டுநீர் பாசனத்தில் உற்பத்தி செய்யப்படும் கரும்புகளின் உயரம், பருமன் ஒரேமாதிரி, அதிக பிழிதிறனுடன் தரமாக இருப்பதால், விவசாயிகளுக்கு போதிய விலையும் கிடைக்கிறது. சொட்டுநீர் பாசனத்தால் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு விவசாயிகளின் விளைச்சலுடன், வருவாயும் அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சொட்டுநீர் பாசனத்தை ஊக்குவிக்க, கரும்பு விவசாயிகளுக்கான கூடுதல் செலவினம் ரூ.68.35 கோடியை தமிழக அரசே ஏற்றுள்ளது. சொட்டுநீர் பாசனத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2020-21 ஆண்டில் இத்திட்டத்துக்கு ரூ.1,600 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது விவசாயிகளிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதிகாரி கள் கூறினர். டி.செல்வகுமார்