Last Updated : 18 Jan, 2020 07:28 AM

 

Published : 18 Jan 2020 07:28 AM
Last Updated : 18 Jan 2020 07:28 AM

வரன்முறைத் திட்டத்தில் 6-வது முறையாக கால அவகாசம்; விதிமீறல் கட்டிடங்களுக்கு நிலையான கட்டுப்பாடுகளை விதிக்குமா தமிழக அரசு?

விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான காலக்கெடு 6-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டரை ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் குறைவான விண்ணப்பங்களே வந்துள்ளதால், நீதிமன்ற தடையை நீக்கி, நிலையான கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் விதிகளை மீறி கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்கு முன் கட்டப்பட்ட கட்டிடங்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்த, நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரைகளின்படி புதிய விதிமுறைகளை தமிழக அரசு வகுத்தது. இதன்படி, 2007-ம் ஆண்டுக்கு முன் விதி மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்தி அனுமதி தரப்படும். வரன்முறைக் கட்டணத்தை கணக்கிட்டு, 6 மாதத்துக்குள் இணையதளம் மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்று கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தது. அப்போது அளிக்கப்பட்ட 6 மாத அவகாசம், அந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. அதன்பின் தொடர்ந்து பலமுறை வரன்முறைப்படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில், 6-வது முறையாக இந்தாண்டு ஜூன் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கட்டிடங்களுக்கான வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் போதிய விண்ணப்பங்கள் வராததாலும், நீதிமன்ற தடையாலுமே தொடர்ந்து விண்ணப்பங்கள் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு வருவதாக வீட்டுவசதித் துறை தரப்பில் கூறப்படுகிறது. அதேநேரம், நீதிமன்ற தடை உத்தரவை நீக்கினால், தமிழகத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, அகில இந்திய கட்டுனர் சங்க தென்னக மையத்தின் தலைவர் எஸ்.ராம்பிரபு கூறும்போது, ” விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்த இந்தாண்டு ஜூன் 21-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டிட வரன்முறை திட்டத்தை பொறுத்தவரை, நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதாவது, கட்டிட வரன்முறை குறித்த சரியான விதிகளையும், விளக்கத்தையும் அளிக்கும் வரை விண்ணப்பங்கள் பெறலாம். ஆனால், அந்த விண்ணப்பத்தின் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை, தமிழக அரசு மனைகள் வரன்முறைத் திட்டத்துக்கு நீதிமன்றம் விதித்த தடையை நீக்கியது போல், ஒருங்கிணைந்த கட்டிட விதிகளை தற்போது அமல்படுத்தியுள்ளதை கூறி, இனிமேல் விதிமீறல் கட்டிடங்கள் வராது என்பதற்கான உறுதியை அளித்து வீதிமீறல் கட்டிடங்களுக்கான தடையையும் நீக்க வேண்டும். அவ்வாறு செய்தால், சென்னையில் இரண்டரை லட்சம் உட்பட தமிழகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் அதிகமான கட்டிடங்களை வரன்முறைப்படுத்த முடியும்’’ என்றார்.

அதே நேரம், சட்டத்தின் மூலம் நிலையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அரசுக்கு வைக்கப்படுகிறது. இதுகுறித்து, வீடு மற்றும் அடுக்குமாடி கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் பி.மணிசங்கர் கூறும்போது, ”முன்னதாக, கடந்த 2001-06 மற்றும் 2006-11 காலங்களிலும் இதே விதிமீறல் கட்டிடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, காலக்கெடு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. அப்போது விதிமீறல் கட்டிட உரிமையாளர்கள் வரன்முறைக்கு விண்ணப்பித்து, அதற்கான தொகையும் கட்டினர்.

ஆனால், அப்போது நீதிமன்றம் 2000-ம் ஆண்டுக்கு முன்னர் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். மின் இணைப்பு உள்ளிட்டவை பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இதனால் வரன்முறை திட்டம் வெற்றிஅடையவில்லை. அதன்பின் தற்போது மீண்டும் வரன்முறைப்படுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே பணம் கட்டிய யாரும் புதிய திட்டத்தில் பணம் செலுத்தவில்லை. எனவே, விதிமீறல் இனி தொடரக்கூடாது என்பதற்கான நிலையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x